சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. தமிழகம் டூ ஆந்திராவுக்கு முடங்கிய பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
அமராவதி: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்திலிருந்து 155 பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது.
ஆந்திரா முதல்வராக 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக - ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திருப்பதி செல்வதற்காக சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்காக பேருந்துக்கு காத்திருக்கிறார்கள். வேலூர், திருப்பத்தூரில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
தமிழகத்திலிருந்து 155 பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்படவில்லை. அத்துடன் ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதியிலேயே ஆந்திரா பேருந்துகள் நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து 155 பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்படவில்லை. அத்துடன் ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதியிலேயே ஆந்திரா பேருந்துகள் நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் வேலூர், கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திராவுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி, சித்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications