ஏங்க 49% ஓட்டு வாங்கியிருக்கோம், இதுல எங்கயிருந்து வந்தது 'ஆன்ட்டி'? சீறுகிறார் ஜெட்லி
டெல்லி: 49 சதவீத வாக்குகளை குஜராத்தில் பாஜக பெற்றுள்ளதால் அங்கு ஆட்சிக்கு எதிரான அதிருப்தி (ஆன்ட்டி இன்கம்பன்சி) அலை வீசுவதாக கூறும் வாதம் ஏற்க முடியாதது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டபை தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்ட அருண் ஜெட்லி, குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
22 வருடங்களாக தொடர்ந்து பாஜக ஆட்சி நடைபெறுவதால்தான் குஜராத்தில் பாஜக 99 தொகுதிகளை மட்டும் வெல்ல முடிந்ததா, என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெட்லி கூறியுள்ளதாவது:

ஓடும் குதிரை
குஜராத்தில் பாஜக 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அப்படியிருக்கும்போது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை என்ற பேச்சுக்கே இடமில்லை. பந்தையத்தில் இரு குதிரைகள் ஓடுகின்றன. ஒரு குதிரை 7-8 சதவீதம் அதிக வெற்றி வித்தியாசம் கொண்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த குதிரையை தப்பு சொல்ல முடியாது.

உள்ளூர் பிரச்சினைகள் காரணம்
வாக்கு சதவீதம் அதிகம் இருந்தும், அது சீட்டுகளாக மாறாததற்கு காரணம், சவுராஸ்டிரா பகுதியிலுள்ள சில மாவட்டங்களின் போதிய வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான். இதற்கு, அங்குள்ள உள்பிரச்சினைகள்தான் காரணம். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவை இதற்கு காரணம்.

ஆய்வு செய்வோம்
சவுராஸ்டிரா பிராந்தியத்தில் ஏன் சீட்டுகள் குறைந்தன என்பது குறித்து கள ஆய்வு நடத்தப்படும். பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். மற்றபடி குஜராத்தில் பாஜக தொடர்ந்து தனது வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

காரணம் சவுராஸ்டிராதான்
பாஜக கடந்த 2012 சட்டசபை தேர்தலைவிட 16 சீட்டுகள் குறைவாக பெற்றது. காங்கிரஸ் 19 சீட்டுகள் அதிகம் வென்றது. ஆனால் காங்கிரஸ் 41.4 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜகவின் வலுவான பகுதியான சவுராஸ்டிராவில் 56 சீட்டுகள் உள்ளன. கடந்த முறை 36 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 23 தொகுதிகளித்தான் வென்றுள்ளது. அங்குதான் பாஜக மொத்தம் 13 சீட்டுகளை இழந்தது. பிற பகுதிகளில் 3 சீட்டுகளைதான் இழந்தது. காங்கிரஸ் இங்குதான் 15 சீட்டுகளை கூடுதலாக வென்றது. பிற பகுதிகளில் 4 சீட்டுகளைதான் கூடுதலாக பெற்றுள்ளது. சவுராஸ்டிராதான் பாஜகவின் சீட் எண்ணிக்கை குறைவுக்கு காரணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications