லோக்சபாவில் அமளி- சி.பி.ஐ. இயக்குநர் நியமன திருத்த மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சி.பி.ஐ. இயக்குநர் நியமனம் தொடர்பான திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்தார் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா என்ற பரபரப்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் இருந்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா விலகி இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இப்படி சர்ச்சைக்குரிய சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா வரும் டிசம்பர் 2-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய சி.பி.ஐ. இயக்குநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படுகிற உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய தேர்வுக்குழு இறுதி செய்பவரை, மத்திய அரசு புதிய சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்க முடியும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக பிரதான எதிர்க்கட்சி இல்லை. 10 சதவீத இடங்களை பெற்றிராத காரணத்தால் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி தரப்படவில்லை.
இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குநர் தேர்வுக்குழுவில் எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலாக தனிப்பெரும் எதிர்க்கட்சி தலைவரை சேர்க்கவும் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் இல்லை என்றாலும் சி.பி.ஐ. இயக்குநரை நியமிக்கவும் ஏற்ற விதத்தில் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது.
கருப்பு பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையிலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்த ஜிதேந்திர சிங், தேர்வு செய்யும் குழுவில் இடம் பெறுகிற 3 உறுப்பினர்களில் ஒருவர் இல்லாததால், சி.பி.ஐ. இயக்குநர் நியமனத்தை நிறுத்தி வைக்க கூடாது; தாமதம் செய்யவும் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த சட்ட திருத்தம் தேவைப்படுகிறது. இதில் அரசிடம் உள்நோக்கம் இல்லை என்றார்.
ஆனால் இந்த மசோதாவை அவசரத்துடன் கொண்டு வந்து நிறைவேற்ற அரசு விரும்புவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு அமைச்சர் ஜிதேந்திர சிங், தற்போதைய சி.பி.ஐ. இயக்குநர் 2-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே விரைவாக புதிய இயக்குநரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது என்றார்.
கருப்பு பணம் தொடர்பாக தங்களது கோரிக்கையின்படி, விவாதம் நடத்தாமல், டெல்லி போலீஸ் சட்ட திருத்த மசோதாவை எடுத்துக்கொள்ளும் அரசின் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இத்தகைய ஒரு மசோதாவை அவசர கோலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டோம். நீங்கள் வற்புறுத்தினால், இதில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
அதைத் தொடர்ந்து அவரும் காங்கிரஸ் உறுப்பினர்களும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications