ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள சிபிஐ, அவரிடம் மேலும் விசாரிக்க தேவையுள்ளதால் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தது. நீதிமன்றம், மேலும் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபியால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட 5 நாள் காவல் நிறைவடைந்ததையடுத்து டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

மும்பை சிறையில் இந்த வழக்கில் தொடர்புள்ள இந்திராணி முகர்ஜியுடன் கார்த்தி சிதம்பரத்தை சேர்த்து வைத்து விசாரித்தபோது கூட கார்த்தி சிதம்பரம் உண்மைகளை வெளியிடாமல் நழுவியதாக சிபிஐ தரப்பு அப்போது குற்றம்சாட்டியது. எனவே, மீண்டும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையுள்ளதால் அதற்கு அனுமதிக்குமாறு சிபிஐ தரப்பு கோரியது.
ஆனால், சிபிஐ காவல் நீட்டிப்பு கேட்கிறார்கள் என்றால் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடிய காரணத்தை தெரிவிக்க வேண்டும், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சிபிஐ செயல்படுகிறார்கள் என்று கார்த்திக் சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, கார்த்திக் சிதம்பரத்தை ஏன் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்ற காரணங்கள் அடங்கிய கோப்பினை சீலிடப்ப்ட்ட கவரில் நீதிபதியிடம் ஒப்படைத்தது சிபிஐ.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கார்த்திக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து உத்தரவிட்டார். முன்னதாக, முதலில் 1 நாள் காவலும் பிறகு 5 நாள் காவலும் விதிக்கப்பட்டிருந்தது. 3வது முறையாக கார்த்தி சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
