பாஜகவுக்கு நோ சான்ஸ்.. சத்தீஸ்கரில் மீண்டும் அரியணை ஏறும் காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகள்? பரபர சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அரியணை ஏறும் என்றும், பாஜக தோல்வியடையும் என்றும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி இருகட்சிகளும் பெறும் வாக்குகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் வருமாறு:
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17 ம் தேதி 2வது கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் இருக்கிறார்.
சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடியாக போட்டி உள்ளது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் லோக்போல் (Lok Poll) சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. தொகுதிக்கு 200 பேரிடம் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 18,000 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 44 முதல் 46 சதவீத ஓட்டுக்கள் பெற்று 55 முதல் 59 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மாறாக பாக 38 முதல் 40 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்று குறைந்தபட்சம் 30 தொகுதியும், அதிகபட்சம் என்றால் 34 தொகுதி வரையும் ஜெயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மற்றவர்கள் 14 முதல் 18 சதவீத வாக்குகள் பெற்றாலும் கூட அதிகபட்சம் என்றால் 2 தொகுதி மட்டுமே வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும். இதனால் பாஜகவினர் களப்பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications