கர்நாடக தலைமை நீதிபதி வகேலா திடீரென ஒடிசாவுக்கு இடமாற்றம்!
டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எச். வகேலாவை (60) ஒடிஸா மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்குள் அவர் தமது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் சிறிய மாநிலமாகக் கருதப்படும் ஒடிஸாவில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக தன்னை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை ஏற்க டி.எச். வகேலா தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையம் தொடர்பான மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், குடியரசுத் தலைவரின் உத்தரவை ஏற்கும்படியும், புதிய பொறுப்பை ஏற்க அதில் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தரப்பு அறிவுறுத்தியது. அதையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு வகேலா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்ற வகேலா, தமது பதவிக்காலத்தில் மீதமுள்ள ஓராண்டை ஒடிஸா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கழிப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே, அவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தால், 65 வயதாகும்வரை வகேலா அப்பதவியில் நீடிக்க முடியும்.
கர்நாடகத்துக்கு புதிய நீதிபதி: இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜியை (59) கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் கர்நாடகத்துக்கு இடமாற்றலாகும்போது அந்த மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) செயல்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications