8 வயது சிறுவன் நரபலி? கண் பிடுங்கப்பட்டு ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்ட கொடூரம்! அதிர்ந்த போலீஸ்
லக்னோ: ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவனின் கண் தோண்டப்பட்ட நிலையில், அந்தப் பெட்டியிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் பிஸ்கட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகத் தனியாகப் பல சட்டங்கள் கூடக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

கொடூரம்
அங்கு மீரட் அருகே பரேலி அடுத்துள்ள இசாத்நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளான். எட்டு முதல் ஒன்பது வயது மதிக்கத்தக்க அந்த அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் ஸ்டீல் பெட்டி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஸ்டீல் பெட்டியில் சிறுவனின் உடலுடன் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள், சிறிய தலையணை மற்றும் போர்வையும் இருந்ததைப் பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சிறுவனின் உடல், டெல்லி- லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நகட்டியா ஆற்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போலீஸ் சொல்வது என்ன
இது தொடர்பாக பரேலி நகரக் காவல் கண்காணிப்பாளர் மனுஷ் பரேக் கூறுகையில், "சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 7-8 மணி நேரத்திற்கு முன் அவன் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. இதில் கொடூரம் என்னவென்றால் கூர்மையான கருவியால் அவனது இடது கண்ணை வெளியே எடுத்துப் போட்டுள்ளனர். அந்தப் பையில் ஸ்நாக்ஸ், பிஸ்கட் மற்றும் ஒரு சிறு தலையணையும் இருந்தது. தடயவியல் குழுவினர் முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்து வருகிறார்கள்" என்றார்.
விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும், அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் மாயமானதாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்ட சிறுவன் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இது குறித்து கண்காணிப்பாளர் மனுஷ் பரேக் மேலும் கூறுகையில், "கொல்லப்பட்ட சிறுவனை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். டெல்லி- லக்னோ நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உடலைப் போட்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து கொலையாளி சடலத்தைப் போட்டிருப்பான் எனக் கருதுகிறோம்" என்றார்.
நரபலி?
இப்போது அனைத்துக் கோணங்களிலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். கடத்தல், கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் காவல் ஆய்வாளர் பிஜேந்திர சிங் தெரிவித்தார். அதேநேரம் சிறுவனின் கண் தோண்டப்பட்ட நிலையில், இருப்பதால் இது நரபலியாகக் கூட இருக்கலாம் என பிஜேந்திர சிங் கூறினார். உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே உறுதியான தகவல்கள் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications