காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை தவிர்த்த சீனா.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியும் ஆப்சென்ட்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என்று சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் ஜம்மு காாஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இந்த மாநாட்டு கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எதிர்வரும் 22 முதல் 24ம் தேதி வரை தால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை 'பொறுப்பற்ற தன்மை' என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஏற்கெனவே பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவிலான நிகழ்ச்சி ஒன்றை இங்கு நடத்துவது பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டியுள்ளது.
அதேபோல கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 4 வீரர்களும் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை நீடித்த வரும் நிலையில் இந்த மோதல் போரை ஏற்படுத்தி விடுமோ என்று அச்சப்படவைத்தது. ஆனால் இந்த விஷயத்தை இரு நாட்டு ராணுவமும் சாதூர்யமாக கையாண்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டன. ஆனால் இச்சம்பவம் மறையாத வடு போல இரு நாடுகளும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் சீனா பங்கேற்காது என்று சொல்லப்படுகிறது. சீனா மட்டுமல்லாது இந்தோனேஷியாவின் தலைவர்களும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு நாடுகளை தொடர்ந்து துருக்கியும் இதில் பங்கேற்காது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியதில் துருக்கிக்கு மாற்றுக்கருத்து இருப்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால் மற்ற நாட்டின் சிறப்பு அழைப்பாளர்கள் வழக்கமாக பங்கேற்பார்கள். எனவே ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நீலம் பள்ளத்தாக்கு, லீபா பள்ளத்தாக்கு மற்றும் ஜீலம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தால் ஏரியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டில் இங்கு இதுவரை நான்கு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 10 ராணுவ வீரர்களும் 7 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். மட்டுமல்லாது கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications