அரசியல்வாதிகளின் பேஸ்புக், டிவிட்டர் 'தில்லாலங்கடி'.. அம்பலப்படுத்தியது 'கோப்ராபோஸ்ட்'!
டெல்லி: பல்வேறு தகிடுதத்தங்கள், ஊழல்கள், முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ள கோப்ராபோஸ்ட் புதிதாக ஒரு மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
எப்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசியல்வாதிகளுக்கு வசதியாக பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி காசு பார்க்கிறார்கள் என்பதையே கோப்ராபோஸ்ட் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
எப்படியெல்லாம் ஆன்லைனை அரசியல்வாதிகளுக்கு சாதகமாக வளைத்து தவறாக அதைப் பயன்படுத்துகிறார்கள் இந்த ஐடி நிறுவனங்கள் என்பதை கோப்ராபோஸ்ட் புட்டுப் புட்டு வைத்துள்ளது.

24 நிறுவனங்களை அம்பலப்படுத்திய கோப்ராபோஸ்ட்
மொத்தம் 24 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இதுதொடர்பாக அன்டர்கவர் ஆபரேஷனை நடத்தி அவர்களை அம்பலப்படுத்தியுள்ளது கோப்ராபோஸ்ட்.

ஆபரேஷன் ப்ளூ வைரஸ்
இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் ப்ளூ வைரஸ் என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த நடவடிக்கையிலிருந்து கோப்ராபோஸ்ட் கண்டறிந்த உண்மைகளை கீழ்க்கண்டவாறு கொடுத்துள்ளனர்.

மெகா மோசடி
அதாவது தங்களை அணுகும் அரசியல் கட்சி அல்லது தலைவருக்கு ஆதரவாக இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றன.

பொய்யான ஆதரவாளர்களைத் திரட்டி
அந்தத் தலைவர் அல்லது கட்சிக்காக பேஸ்புக் பக்கங்களை இவர்கள் உருவாக்கித் தருகிறார்கள். கூடவே ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து இல்லாத நபர்களின் பெயர்களில் இவர்களே லைக் கொடுப்பதும், ஷேர் செய்வதும், பாலோ செய்வதும் என்று மோசடிகளில் ஈடுபடுகிறார்களாம்.

வேண்டாதவர்களுக்கு எதிராக விஷமப் பிரசாரம்
அதேபோல தங்களது கஸ்டமர் தலைவர் அல்லது கட்சிக்கு பிடிக்காத தலைவர் அல்லது கட்சியின் பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இவர்களே விஷமத்தமான பிரசாரத்திலும், அவதூறுகளிலும் ஈடுபடுவார்களாம். இப்படிச் செய்வதற்கு நிறைய காசும் வாங்கிக் கொள்கிறார்களாம்.

ஆக்குவதும் இவர்களே.. அழிப்பதும் இவர்களே
அதாவது ஆக்குவதும் இவர்களே, அழிப்பதும் இவர்களே. ஒருவரது செல்வாக்கை தூக்கி காட்டுவதும் இவர்களே. அவதூறு பேசி காலி செய்வதும் இவர்களே.

அரசியல்வாதிகள் மட்டுமில்லை
அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், பெரிய பெரிய தொழில்நிறுவனங்கள், என்ஜிஓக்கள், ஊழல் கறை படிந்த அரசு அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களும் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனராம்.

அதிரடியாக களம் புகுந்த அசோசியேட் எடிட்டர் ஹசன்
ஆபரேஷன் ப்ளூ வைரஸ் நடவடிக்கைக்காக கோப்ரா போஸ்ட்டின் அசோசியேட் எடிட்டர் சையத் மஸ்ரூர் ஹசன், ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த புள்ளி போல 24 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் அணுகியுள்ளார்.

செல்வாக்கை நிமிர்த்தனும்.. என்ன செய்யலாம்
அந்த நிறுவனங்களிடம் ஹசன் வைத்த கோரிக்கை, எனது கட்சியின் இமேஜையும், அதன் தலைவரின் இமேஜையும் தூக்கி நிறுத்த வேண்டும். எதிர்த் தரப்பினரின் இமேஜே அடித்து நொறுக்கனும்.. என்ன செய்யலாம் என்பது. மேலும் சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற வேண்டும். அமைச்சர் பதவியை நான் வாங்க வேண்டும். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், பணம் பிரச்சினை அல்ல என்று கூறியுள்ளார் ஹசன்.

நாங்க இப்படிச் செய்வோம்
இதையடுத்து அந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் எப்படியெல்லாம் ஹசனுக்கு உதவ முடியும் என்று பெரிய பட்டியலையே கொடுத்துள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்...

போலி பேஸ்புக் பக்கம்
கட்சித் தலைவர் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் லட்சக்கணக்கானோர் லைக் கொடுத்திருப்பது போலவும், பாலோ செய்வது போலவும் சீன் கிரியேட் செய்து தருவோம். அதேபோல டிவிட்டரிலும் பெரிய அளவில் டுபாக்கூர் கணக்கைத் தொடங்கி கலக்கிக் கொடுப்போம்.

எதிர்த்து ஒரு கமெண்ட் கூட வராது
பேஸ்புக் பக்கத்தில் உங்களது தலைவருக்கு எதிராக எந்த ஒரு எதிர்மறையான விமர்சனக் கருத்துக்களும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வோம்.

அவதூறாக பிரசாரம் செய்வோம்
அதேபோல உங்களது தலைவருக்குப் பிடிக்காதவருக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவோம். அவர்களது பேஸ்புக் டிவிட்டரில் அவதூறான விஷயங்களைப் போட்டு வைப்போம்.

அமெரிக்காவிலிருந்து கொரியா வரை
இந்த வேலைகளையெல்லாம் அமெரிக்கா, கொரியா போன்ற வெளிநாடுகளிலிருந்து செய்வது போல காட்டிக் கொள்வோம். அப்போதுதானே நாங்க மாட்டிக்க முடியாது.

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள் மூலம்
இந்த வேலைகளையெல்லாம் நாங்கள் அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள் மூலமாகத்தான் செய்வோம். வேலையை முடித்த பின்னர் அந்த கம்ப்யூட்டர்களை அழித்து விடுவோம்.

பிராக்ஸி கோட்கள்
சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர்களில் பிராக்ஸி கோட்களை அதாவது பினாமி போல பயன்படுத்துவோம். மேலும் அவற்றின் இடத்தை மணிக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருப்போம். இதனால் யாருமே கண்டுபிடிக்க முடியாது.

முஸ்லீம்களின் பெயர்களைப் பயன்படுத்தி
போலியான முஸ்லீம் பெயர்களைக் கொண்டு புரபைல்களை உருவாக்கி அவர்கள் உங்களது தலைவரைப் புகழ்ந்து பேசுவது போல சீன் காட்டுவோம்.

யூடியூபை பற்ற வைப்போம்
அதேபோல உங்களது தலைவர் அல்லது கட்சியைப் பற்றிய வீடியோவைத் தயாரித்து அதை யூடியூபில் போட்டு அதை உலகம் முழுவதும் வைரல் போல பரவச் செய்து பரபரப்பை ஏற்படுத்துவோம்.

வெளிநாட்டு ஐபி, சர்வர்கள்
இந்த வேலைகளின்போது நாங்கள் வெளிநாட்டு ஐபிக்கள், சர்வர்களை மட்டுமே பயன்படுத்துவோம்.

ஹேக்கிங்கும் செய்வோம்
உங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அதில் தவறான, அவதூறான விஷயங்களைப் போட்டு விட்டு வருவோம்.

ரொக்கமாகத்தான் காசு தர வேண்டும்
எங்களுடைய வேலைகளுக்கான கட்டணத்தை நீங்கள் ரொக்கப் பணமாகத்தான் தர வேண்டும். காசோலைகள் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கூலிப்படையா.. ஐடி நிறுவனங்களா...
இப்படி தாங்கள் செய்யப் போவதை பட்டியலிட்டுக் கூறியதைக் கேட்டபோது ஹசனுக்கு தான் பேசிக் கொண்டிருப்பது ஐடி நிறுவனப் பிரதிநிதியுடனா அல்லது கூலிப்படையினரிடமா என்ற சந்தேகம் வந்து விட்டதாம்.

குண்டு வச்சுரலாமா பாஸ்.. அதிர வைத்த பத்தாரே
இதில் பிபின் பத்தாரே என்ற ஒரு ஐடி நிறுவன ஊழியரின் பேச்சுதான் ஹசனை அதிர வைத்ததாம். அதாவது வெடிகுண்டு வைக்கலாமா சொல்லுங்க பண்ணிரலாம்.. இல்லை, மதக் கலவரத்தைத் தூண்டனுமா, சொல்லுங்க செஞ்சுடலாம். இல்லாவிட்டால் முஸ்லீம்களை வாக்குப் பதிவு தினத்தன்று மிரட்டி வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கனுமா.. அதையும் செய்யலாம் என்று அதிரடியாக பேசினாராம்.

அதை விட அதிரடியாக
மேலும் பத்தாரே சொன்ன இன்னொரு விஷயம் அதை விட பரபரப்பாக இருந்ததாம். அதாவது பிரவீன் ஜாரா என்பவரை எப்படி தாங்கள் வெற்றி பெற வைத்தோம் என்பதை பத்தாரே இப்படிக் கூறினாராம்.. ஜாராவை நாங்கள்தான் ஜெயிக்க வைத்தோம். என்ன செய்தோம் தெரியுமா... அவருக்கு முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரது தொகுதியில் நிறைய முஸ்லீ்ம் ஓட்டுக்கள் இருந்தன. கண்டிப்பாக அவை ஜாராவுக்குக் கிடைக்காது. எனவே நாங்களே ஒரு கலவரத்தை செட்டப் செய்தோம். சின்னதாக கையெறி குண்டை வெடிக்கச் செய்தோம். இதன் மூலம் கிட்டத்தட்ட 60 சதவீத எதிர் வாக்குகளைத் தடுத்து விட்டோம் என்றாராம் பத்தாரே.

ரூ. 92,000 பேரம் பேசிய பிரியதர்ஷன் பதக்
பிரியதர்ஷன் பதக் என்பவர் ரூ. 92,000 பேரம் பேசி அதை இரண்டு கட்டமாக தலா ரூ. 45,000 என பணம் வாங்கிக் கொண்டராம். இதை வீடியோவில் படமாக்கியுள்ளது ஹசன் குழு. ஒரு கற்பனையான நிறுவனத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் பணிக்காக இந்த டீலிங்கை செய்ததாம் ஹசன்.

சட்டத்திற்குட்பட்ட சட்டவிரோதம்
இந்த சட்டவிரோதமான, மோசடி வேலைகளையெல்லாம் சத்தம் போடாமல், சட்டத்திற்குக் கூட கேட்காத அளவுக்கு செய்து கொண்டிருக்கிறார்களாம் பல ஐடி நிறுவனங்கள்.

சட்டம் தூங்குவது ஏன்...
ஆனால் ஐபிசி, தகவல் தொழில்நுட்பச் சட்டம், வருமான வரிச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என எத்தனையோ சட்டங்கள் இருந்தும் இவை எல்லாம் இந்த சட்டவிரோத செயல்களைக் கண்டுகொள்ளாமல் போனது ஆச்சரியமாக இருப்பதாக கூறுகிறது கோப்ராபோஸ்ட்..

சமூக நல்லிணக்கம், அமைதியைக் குலைக்கும் அகோரம்
சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத்தி பலரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது சமூக நல்லிணக்கம், அமைதி, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் ஆகியவற்றுக்குப் பெரும் பங்கம் விளைவிக்கும் வகையிலான அபாயகரமான போக்கில் போய்க் கொண்டிருப்பதாக கூறுகிறது கோப்ராபோஸ்ட்.

தவறான பிரசாரத்தில் முன்னணியில் பாஜக
ஹசனின் கூற்றுப்படி அரசியல் கட்சிகளிலையே பாஜகதான் சோஷியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக கோப்ராபோஸ்ட் கூறுகிறது. எனவே மோடி தொடர்பான மீடியா பிரசாரங்களில் குறிப்பாக சோஷியல் மீடியா பிரசாரங்களில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாக கோப்ராபோஸ்ட் கூறுகிறது.

அரசியல் வேலைகளிலிருந்து 3 சதவீத வருவாய்
பெங்களூரைச் சேர்ந்த சில ஐடி நிறுவனங்களின் வருவாயில் 3 சதவீத அளவுக்கு இதுபோல அரசியல் பணிகள் மூலமாகத்தான் ஈட்டப்படுவதாக டிரெய்ம்ஸ் என்ற நிறுவனத்தின் டிராகம் படேல் கூறுகிறார். இதில் பாஜக மூலமாகத்தான் பெருவாரியான வருவாய் கிடைக்கிறதாம்.
தலையைச் சுத்தி வருகிறது..












Click it and Unblock the Notifications