பாஜக தலைவர் காலில் விழுந்து வணங்கிய காங்.எம்எல்ஏ.. தேர்தல் பரபரப்புக்கு நடுவே ம.பியில் நடந்த சம்பவம்
இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான சஞ்செய் சுக்லா, அம்மாநில பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய் வர்கியா காலில் விழுந்து வணங்கினார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் செயல் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும் தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டன. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை கடந்த கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகள் முதல்வராக கமல் நாத் பதவி வகித்த நிலையில், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார்.
அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 128 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். காங்கிரஸ் கட்சி 98 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் சுயேட்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். நடைபெற இருக்கும் தேர்தலிலும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால், கடந்த முறை போல பாஜகவின் ஆபரேஷன் தாமரையில் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. வேட்பாளர் தேர்விலும் மிகக் கவனமாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏவான சஞ்செய் சுக்லா, மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய் வர்கியா காலில் விழுந்து வணங்கினார்.
அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்துக் கொண்ட போது நல்லியல்பை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. பாஜக மூத்த தலைவரின் காலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விழுந்தது அவரின் நட்பு பாராட்டும் வகையில் நடந்து கொண்டதை அங்கிருந்த பலரும் வரவேற்கவும் செய்தனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications