கேரளாவில் மையம் கொண்ட காங்கிரஸ் சூறாவளி.. 20க்கு 16 வேட்பாளர்கள் அறிவிப்பு.. களத்தில் முக்கிய தலைகள்
கேரளா: காங்கிரஸ் கட்சி இன்று முதற்கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் கேரளாவில் மட்டும் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதுவும், காங்கிரசின் முக்கிய புள்ளிகள் கேரளாவில் களம் காண இருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி, சசி தரூர், சத்தீஷ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், டிகே சிவக்குமாரின் சகோதரர் டிகே சுரேஷ், முன்னாள் முதல்வர் கருணாநகரனின் கே முரளீதரன் உள்பட முக்கிய தலைவர்கள் இன்று வெளியான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதிலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கேரளாவில் போட்டியிட உள்ளனர். முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகன் கே. முரளீதரன் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் மீண்டும் களம் இறங்குகிறார்.
முக்கிய தலைவர்கள்: ராகுல் காந்தி, கடந்த முறை போட்டியிட்ட வயநாடு தொகுதியிலேயே போட்டியிடுகிறார். கேரளாவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாக மல்லு கட்டுகின்றன. இருந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் வலுவாக இருப்பதால் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலிலே காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து இருக்கிறது.
கேரளாவில் உள்ள 16 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்:
கண்ணூர் - சுதாகரன்
காசர்கோட் - ராஜ்மோகன் உன்னிதன்
வடக்கரா - சஹாபி பரம்பில்
வயநாடு - ராகுல் காந்தி
கோழிக்கோடு - எம்.கே ராகவன்
பாலக்காடு - ஸ்ரீகாந்தன்
திருச்சூர் - முரளீதரன்
ஆலதூர் - ரம்யா ஹரிதாஸ்
ஷலக்குடி - பென்னி பெஹ்னான்
எர்ணாகுளம் - ஹிபி ஏடன்
இடுக்கி - டீன் குரியகோஸ்
ஆழப்புலா - கேசி வேணுகோபால்
மவேலிக்கரா - கொடிகுன்னில் சுரேஷ்
பத்தினம் திட்டா - அண்டோ ஆண்டனி
ஆட்டிங்கால் - ஆதூர் பிரகாஷ்
திருவனந்தபுரம் - சஷி தரூர்
எதிரும் புதிருமாக: லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வருகின்றன. இதனால் கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் இடையேதான் போட்டி உள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 4 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: 16 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் யுடிஎப் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மலப்புரம் மற்றும் பொன்னானி தொகுதியில் போட்டியிட உள்ளன. கேரள காங்கிரஸ் கட்சி கோட்டயம் தொகுதியில் போட்டியிடுகிறது. கொல்லம் தொகுதியில் ஆர்.எஸ்.பி கட்சி போட்டியிட்ட உள்ளது.












Click it and Unblock the Notifications