டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு இல்லை… கூட்டணியும் இல்லை: காங். திட்டவட்டம்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சிக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி ஜன் லோக்பால் சட்டத்தை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 49 நாட்களே மட்டுமே ஆட்சி செய்த அரவிந்த கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தற்போது டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க விரும்பாத நிலையில் அக்கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு மீண்டும் அரசமைக்க ஆதரவளிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பங்களின் படி, ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டு சேர்ந்தால் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும் என மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு அங்கு மீண்டும் தேர்தல் நடக்கபோவதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவில்லை என கூறிவிட்டது.
லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஏழு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து படுதோல்வியடைந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து, டெல்லியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அஜய் மாக்கான் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் தனது விருப்பத்தின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி அரசில் அரங்கேற்றிய மோசமான நாடகத்துக்கு மீண்டும் எந்த வகையிலும் ஆதரவு அளிக்க மாட்டோம் எனவும் அஜய் மக்கான், தனது டுவிட்டர் வலை தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயல்வதாக பரவி வரும் செய்தி வதந்திதான் என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications