80% கிறிஸ்துவர்கள்தான்.. இந்துத்துவ கட்சி பாஜகவுக்கு மிசோரத்தில் சான்சே இல்ல! காங்கிரஸ் மாநில தலைவர்
அய்சால்: 80 சதவீதம் கிறிஸ்துவர்கள் வசிக்கும் மிசோரம் மாநிலத்தில் இந்துத்துவ கட்சியான பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
நவம்பர் 7 ஆம் தேதி தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மிசோரம் மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் பரப்புரை பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் மாநில தலைவர் லால்சவ்தா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார்.

அப்போது பேசிய அவர், "பிரச்சார பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 26 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். இல்லையென்றால் குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது வெல்வது உறுதி. மிசோ மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்கள். மிசோரம் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள். அவர்கள் மத சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட பாஜகவை அவர்கள் விரும்பவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தங்களுக்கு மத சுதந்திரம் இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஆளும் எம்.என்.எப் கட்சியுடன் இம்முறை பாஜக சேராததற்கு காரணம் அவர்களின் மோசமான ஆட்சிதான். எனவேதான் பாஜக ZPM என்ற கட்சியுடன் கூட்டணி அமைக்க முயல்கிறது. மிசோரத்திற்கு என்ன வேண்டும் என காங்கிரஸுக்கு தெரியும். காங்கிரஸ் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. நாங்கள் எங்கள் ஆட்சிமுறையில் மாற்றத்தை கொண்டு வருவோம். மக்களின் சார்பாக நிற்போம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் துணை கேபினட் கமிட்டி அமைக்கப்படும். ஒவ்வொரு துறைகளிலும் சீர்திருத்தத்தை அமைச்சரவை குழு கொண்டு வரும். எங்களின் கொள்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த துணை கமிட்டி என்பது நிரந்தரமான அமைப்பாக இருக்கும். மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும். தொடர் நிர்வாக சீர்திருத்தங்களின் மூலமாக புதிய வழியை நாங்கள் ஏற்படுத்தப்போகிறோம். மிசோரம் இனி புதிய வழியில் ஆட்சிமுறை பார்க்கப்போகிறது.
மிசோரம் ஒரு ஏழை மாநிலம். இங்கு வருவாய்க்கு தேவையான வளங்கள், மூலங்கள் இல்லை. எனவே மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்களையே நாங்கள் நாடி இருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் நிதியில் அவை 90:10 என்ற விகிதத்தில் அமல்படுத்தப்படுகின்றன. அது மிகப்பெரிய தொகை. அதை முறையாக கையாண்டால் மாநிலத்தில் உள்ள பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். எனவேதான் நாங்கள் அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்துக்கு மாற்றாக பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதாக சொல்கிறோம்.
மிசோ தொழில்முனைவு திட்டத்தை அறிமுகம் செய்து தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்ய உள்ளோம். இதன் மூலமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். நிரந்தர அரசு ஊழியர் இல்லாத குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை செய்யும் வகையில் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்க உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications