டெல்லி: ஆம் ஆத்மிக்கு காங்கிரசார் எதிர்ப்பு: கேஜ்ரிவால் உருவபொம்மை எரிப்பு
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது தொடர்பாக அக்கட்சித்தலைவர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்கும் முன்பாகவே கேஜ்ரிவால் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், "ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதிலும், அக்கட்சித் தலைவர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நிறுத்த மாட்டோம். எங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்" என நேற்று கூறியிருந்தார்.
இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்சியமைக்க ஆதரவும் கொடுத்து, ஊழல் விசாரணையையும் எதிர்கொண்டு கட்சியின் பெயருக்கு பின்னடவை ஏற்படுத்த வேண்டுமா? என டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொண்டு புலம்பினர்.
இதனைத் தொடர்ந்து காரணமாகவே டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்னர் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ஆம் ஆத்மிக்கு எதிராக முழக்க மிட்டவாரே அரவிந்த் கேஜ்ரிவால் உருவபொம்மையை எரித்தனர்.
காங்கிரஸ் பெருந்தன்மை
போராட்டத்திற்கு தலைமை ஏற்ற டெல்லி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நபீஸ் மல்லீக், செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆம் ஆத்மி கட்சியினர் காங்கிரசை விமர்சித்த போதும் அதை பொருட்படுத்தாமல் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆதரவு தர ஒத்துக்கொண்டனர். இதை மதிக்காமல் காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்று கூறுகின்றனர் என்றார்.
கருத்து வேறுபாடு
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தருவதை எதிர்த்து சில தலைவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். இதனை ஒப்புக்கொண்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி," ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பது என்ற முடிவு தவறானது என்ற கருத்து கட்சியின் ஒருதரப்பினரிடையே நிலவுகிறது உண்மைதான். நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, மக்களின் பிரச்னைகளை எழுப்பலாம்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால், பிரச்னைகள் மீது காங்கிரஸ் நடுநிலையான போக்கையே மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் டெல்லியின் முகத்தையே காங்கிரஸ் மாற்றியது. ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில், வேறு யாராவது ஆட்சி அமைக்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
டெல்லி வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், எனவே, எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்கள் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்றும் அந்த சிலர் கருதுகிறார்கள். இதையும் மீறி, ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதை முறையாக பின்பற்றுவோம்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, வருங்காலத்தில் ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் பெறுவோமா? என்பது பற்றி எதுவும் கூற முடியாது. அதிதீவிரமான அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றாது என்றார்.












Click it and Unblock the Notifications