யுக்தா முகி குடும்ப பிரச்சினை: மத்தியஸ்தரை நியமித்த மும்பை ஹைகோர்ட்!
மும்பை: முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறில் தீர்வு காண மத்தியஸ்தர் ஒருவரை மும்பை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
முன்னாள் உலக அழகி யுக்தா முகிக், தொழிலதிபர் பிரின்ஸ் டுலியை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவர் பிரின்ஸ் டுலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது யுக்தா முகி மும்பை காவல்துறையில் குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் செய்தார். மேலும் பிரின்ஸ் டுலி தன்னை இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரின்ஸ் டுலி மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பிரின்ஸ் டுலிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிமன்றம், அவரது குடும்பத்துக்கு வழங்கியது.
அதே நேரத்தில் பிரின்ஸ் டுலியை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியது. கணவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய இந்த இடைக்கால நிவாரணத்தை எதிர்த்து யுக்தா முகி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல முன்ஜாமீன் கேட்டு பிரின்ஸ் டுலி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சதானா ஜாதவ் முன்னிலையில் நடந்து வருகிறது.
இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி சுமூக தீர்வு காணும் முயற்சியில் நீதிபதி ஈடுபட்டார். அவரது உத்தரவின் பேரில் யுக்தா முகியும், பிரின்ஸ் டுலியும் நீதிபதி அறையில் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி நடத்திய விசாரணையில் சமரசம் அடைய இருவரும் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், நீதிபதி சதானா ஜாதவ் முன்னிலையில் திங்களன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது யுக்தா முகி, பிரின்ஸ் டுலி ஆகியோர் தரப்பில், தங்களுக்கு இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தரை நியமிக்குமாறு நீதிபதியை கேட்டு கொண்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூத்த வழக்கறிஞர் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்குமாறு சட்ட உதவி குழுவுக்கு உத்தரவிட்டார். இந்த மத்தியஸ்தர், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு நவம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications