இவர்களை தண்டிக்காவிட்டால் பசுக்களே அழிந்துவிடும்.. மாட்டிறைச்சி வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காந்தி நகர்: ''இவர்களை தண்டிக்காவிட்டால் பூமியில் மொத்த பசுக்களும் அழிந்துவிடும்'' என்று கூறி மனுஸ்மிரிதி, ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மேற்கொள் காட்டி பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டிய 3 பேருக்கு குஜராத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் காலோல் தாலுகாவில் உள்ள வீட்டில் திடீரென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டத்துக்கு விரோதமாக பசுமாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அங்கிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரந்து 277 கிலோ பசுமாட்டின் இறைச்சி, கத்தி, கோடரி, தராசு, கயிறு, வாகனங்கள், மாட்டின் தலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நடந்தது.
இந்த வழக்கு காலோல் (காந்தி நகர்) கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. இந்நிலையில் தான் நீதிபதி பிரிஜேஷ் குமாரி ராமேஸ்வர்சிங் ராஜ்புத் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி குஜராத் விலங்கு பாதுகாப்பு சட்டப்பிரிவு 1954ன்படி 3 பேருக்கும் தலா 2 லட்சம் அபராதம் மற்றும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். இருப்பினும் ஒரே நேரத்தில் தண்டனையை அனுபவிக்க கூறியதால் 3 பேருக்கு ஆயுள் தண்டனையை அனுபவித்தால் மட்டுமே போதும்.
இந்த தீர்ப்பு 76 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் மனுஸ்மிரிதி, ரிக் வேதம் உள்ளிட்டவற்றில் பசுக்கள் பற்றி இருக்கும் சில குறிப்புகளை கூறினார். இதுதொடர்பாக நீதிபதி, ''மனுஸ்மிரிதியில் பசுமாடு என்பது விலங்காக கருதாமல் செல்வம், சமூகம் மற்றும் மதத்தின் தூணாக பாவித்துள்ளது. கால்நடைகளை பாதுகாப்பதற்கும், பசுக்களை பராமரிப்பதிலும் உள்ள பொறுப்புகளை குறிப்பிட்டுள்ளது. இந்து மத நூல்களில் பசுக்களில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை விவரித்துள்ளது. ரிக் வேதத்தில் பசு என்பது 'அதான்யா' என சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பசுவை கொல்லக்கூடாது என்று அர்த்தம்.
மேலும் இந்த வழக்கில் இவர்களை தண்டிக்காவிட்டால் எதிர்காலத்தில் பூமியில் பசுக்களே இல்லாத நிலை வந்துவிடும்.'' என கூறி 3 பேருக்கும் ஆயுள் தண்டனையை விதித்துள்ளார். அதுமட்டுமின்றி தீர்ப்பில் சமஸ்கிருதத்தில், ''நீயே எல்லா தெய்வங்களுக்கும் அன்னை நீயே எல்லா புனித யாகங்களுக்கும் மூலமும் காரணம். நீயே புனித நீர் நிலைகளிலும், புனித ஸ்தலங்களிலும் மிகவும் புனிதமாவள்'' என பசுவை பற்றி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
