பசுக்களுக்கு ரூ.50 கோடியில் ஐடி கார்டாம்.. இந்த சில புரட்சி திட்டங்களையும் பரிசீலனை பண்ணுங்க ப்ளீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பசுக்களுக்கு 50 கோடியில் ஆதார் திட்டம்...வீடியோ

  டெல்லி: பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ரூ.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

  பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை செல்லாக்காசு போல புறக்கணித்த போதிலும், இதுபோன்ற புரட்சிகர திட்டம் (!) குறித்த தகவலால், புழகாங்கிதம் அடைந்துள்ளனர் பாஜக ஆதரவு மிடில் கிளாஸ் வர்க்கம் என்கிறது டெல்லி வட்டாரம்!

  சம்பளம் வாங்கும் மனிதனுக்கு வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் செய்யாததை, பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.50 கோடியை வாரி இறைத்த, இந்த ஒற்றை அறிவிப்பு மறக்கடித்து, மக்களை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்துள்ளது என பாஜக தலைவர்கள் வரிசையாக டிவி சேனல்களுக்கு போன் போட்டு பேட்டி கொடுத்தாலும் கொடுக்கலாம்.

  நிபுணர் குழு பரிந்துரை

  நிபுணர் குழு பரிந்துரை

  இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது.

  ரூ.50 கோடி

  ரூ.50 கோடி

  இதைத் தொடர்ந்துதான், தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று ஒரு அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  இதற்காக பசுக்களிடம் ரேகை எடுக்கப்போகிறார்களாம். அதன் இனம் (ஜாதி), வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் என படு பிஸியாக அவற்றை சேகரித்து, பயோமெட்ரிக் வகையில் அந்த தகவல்கள் சேகரிக்கப்படும் என கூறியுள்ளது மத்திய அரசு. ஒவ்வொரு அட்டைக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 வரையில் செலவாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

  புரட்சிகர திட்டங்கள்

  புரட்சிகர திட்டங்கள்

  நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு கெஞ்சிக்கொண்டிருக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினர் எப்படியாவது வரிகளை குறைத்து எங்களை வாழ விடுங்கள் என மன்றாடிக்கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு புரட்சிகர திட்டத்திற்காக ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து அசத்தியுள்ளது மத்திய அரசு. இதே வேகத்தில் இன்னும் சில புரட்சி திட்டங்களை செயல்படுத்தி, உலக அரங்கில் இந்தியர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், சில ஐடியாக்களை கொடுக்கிறோம்.

  வரி வசூலிக்கலாம்

  வரி வசூலிக்கலாம்

  அடையாள எண் கொடுத்து அதுக்கொரு அட்டை கொடுத்த பிறகு, இந்த அட்டையை பசு மாட்டின் உரிமையாளர், ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லலாம். இதன் மூலம், பசு மாடு வச்சிருக்கிறவங்களை ஒரு குரூப்பா பிரிச்சு, அதுக்கு தனியாக வரி கட்டச் சொல்லலாம். இதன் மூலம், வரி வருவாய் ஊக்கப்படுத்த முடியும். இப்படி வரி கட்டுவோருக்கு சில சலுகைகளை அறிவிக்கலாம். இதனால் பசு மாட்டுக்கு வரி கட்ட உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு முன்வருவார்கள். வல்லரசாகும் வழிப் பயணத்தில் இதுபோன்ற வரிகளும் நமது நிதி ஆதாரத்திற்கு உரம் சேர்க்கும்.

  ஓட்டு நிச்சயம்

  ஓட்டு நிச்சயம்

  அப்படியே பசு மாட்டுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் கொடுத்துவிடலாம். பசு மாட்டுக்கு சாதகமான கட்சி என்ற பெயர் உள்ளதால், பசு மாடுகளின் வாக்குகளை அறுவடை செய்து, மெகா வெற்றி பெற அது பாஜகவுக்கு உதவக் கூடும். மீண்டும் மீண்டும் ஓடி வந்து இந்த கட்சிக்குதான் நான் ஓட்டு போடுவேன் என்று அவை அடம் பிடித்து வம்பு செய்யாமல் இருக்க, மனிதர்களுக்கு போல மாடுகளுக்கும் அழியாத மையை உடலில் தடவி விட்டு, 'இது ஓட்டு போட்ட மாடு' என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். கள்ள ஓட்டு தடுக்கப்படும் பாருங்க!

  எருமை மாடுகள்

  எருமை மாடுகள்

  ஏற்கனவே மத, ஜாதி அடிப்படையில் பாஜக பிரிவினைபடுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் கறுப்பாக இருக்கும் எருமை மாடுகளுக்கு அடையாள அட்டை கொடுக்காமல், பசு மாடுகளுக்கு மட்டுமே கொடுத்தால் பெரும் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளதால், எருமைகளுக்கும் அடையாள அட்டை கொடுக்கலாம். அதுக்கு நூறு கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்யலாம். என்ன குறைஞ்சிவிடும், சொல்லுங்க?

  திருமணப் பதிவு

  திருமணப் பதிவு

  பசு மாடுகளுக்கு திருமண வயதை எட்டியதும், அதே ஜாதி காளை மாடாக பார்த்து திருமணம் செய்து வைத்து சீர்வரிசை கொடுத்து அனுப்பலாம். திருமணத்தை பதிவு செய்வதும் கட்டாயம் என உத்தரவிடலாம். இதன் மூலம், கலப்பினங்கள் தடுக்கப்பட்டு, நாட்டு மாடுகள் வளர்ச்சி அமோகமாக நடைபெறும். இதுபோன்ற யோசனைகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் பரிசீலிக்குமா என்பதே மக்களின் இப்போதைய, அவசர, உடனடி, பரபரப்பு எதிர்பார்ப்பாக உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP government is set to assign each of the country’s milk-producing cows a unique identity card or UID.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற