மாணவர்களுக்கு கடன் அட்டை; ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்... தேர்தல் அறிக்கையில் அசத்தும் மம்தா!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். ஒரு வருடத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழைகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையம் பாஜகவால் வழிநடத்தப்படுகிறது. அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

சூடுபிடிக்கும் மேற்கு வங்க தேர்தல்
மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று வருகிறது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. முன்பு மம்தாவின் வலதுகரமாக விளங்கி, தற்போது பாஜகவில் இருக்கும் சுவேந்து அதிகாரியும், மம்தா பானர்ஜியும் நந்திகிராம் தொகுதியில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.

மம்தா காலில் அடிபட்டது
கடந்த வாரத்தில் ரோயாரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜிக்கு திடீரென அடிபட்டது. இதனால் அவர் காலில் காயம் அடைந்தார். தன்னை பாஜகவை சேர்ந்தவர்கள்தான் தாக்கினர் என்று மம்தா பானர்ஜி பகீர் குற்றம் சாட்டினார். ஆனால் இதை மறுத்த பாஜக, தேர்தலுக்காக மம்தா நாடகமாடுகிறார் என்று குற்றம் சாட்டியது.

தேர்தல் அறிக்கை வெளியிட்டார்
இது குறித்து விளக்கம் அளித்த மாநில தேர்தல் ஆணையம் காரின் கதவு இடித்ததால் மம்தாவின் காலில் காயம் ஏற்பட்டது என்று கூறியது. இதனை தொடர்ந்து காலில் கட்டுடன் வீல் சேரில் அமர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் மம்தா. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார்.

25 லட்சம் கூடுதல் வீடுகள் கட்டப்படும்
திரிணாமுல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு வருடத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ .6,000-ல் இருந்து ரூ .10,000 மானியமாக வழங்கப்படும். பங்களா அபாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
மஹிஷ்யா, திலி, தம்புல் மற்றும் சஹா சமூகங்கள் ஓபிசி அட்டவணையில் சேர்க்கப்படுவார்கள். வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழைகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் மாணவர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

விவசாயிகளின் வருமானம் உயர்த்தியுள்ளோம்
இதனை தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:- இது ஒரு அரசியல் அறிக்கை அல்ல, இது வளர்ச்சி சார்ந்த அறிக்கையாகும். இது மக்களுக்கான ஒரு அறிக்கையாகும். நாங்கள் மாநிலத்தில் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு முன்மாதிரிகளை அமைத்துள்ளோம், உலகளாவிய விருதுகளை வென்றிருக்கிறோம். வறுமை அளவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தியுள்ளோம்.

தேர்தல் ஆணையம் பாஜகவால் வழிநடத்தப்படுகிறது
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது வருவாய் சுமார் ரூ .25,000 கோடியாக இருந்தது, இப்போது வருவாய் ரூ .75,000 கோடிக்கு மேல் உள்ளது.தேர்தல் ஆணையம் பாஜகவால் வழிநடத்தப்படுகிறது. அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று மம்தா பானர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications