பீகாரில் தலித்களை குதிரையில் கட்டி இழுத்துச் சென்று துப்பாக்கியால் அடித்த கும்பல்
பாட்னா: மேற்கு பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 2 தலித் நிர்வாகிகள் உள்பட 3 பேர் குதிரைகளில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு ஒரு கம்பத்தில் கட்டி வைத்து துப்பாக்கியின் பின்புறம் மற்றும் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் நவ்காச்சியா மாவட்டம் கைர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காரிக் பகுதி ஐக்கிய ஜனதாதள தலித் பிரிவின் தலைவர் பப்லு தாஸ். அவரது உதவியாளர் நீரஜ் தாஸ். கடந்த சனிக்கிழமை பப்லு, நீரஜ் மற்றும் கபில்தேவ் மண்டல் ஆகிய 3 பேர் பைக்கில் வெளியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நவ்காச்சியா ரிவெரின் பகுதியில் செல்கையில் கைர்பூரின் முக்கியமான ஆளான விமலா தேவிக்கு நெருக்கமான அஜய் யாதவ் அந்த 3 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கீழே விழுந்துள்ளனர். பப்லு மற்றும் நீரஜை ஒரு குதிரையிலும், மண்டலை மற்றொரு குதிரையிலும் கட்டி விமலா தேவியின் வீடு வரை இழுத்துச் சென்றுள்ளனர் யாதவ் மற்றும் அவரது ஆட்கள்.
விமலா தேவியின் வீட்டுக்கு அருகில் உள்ள கம்பத்தில் அவர்களை கட்டி வைத்து துப்பாக்கியின் பின்புறம் மற்றும் கம்புகளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த 3 பேரும் காரிக் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
விமலா தேவிக்கும் உள்ளூர் முனிசிபால் வார்டு உறுப்பினருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அதனால் அந்த நபரை பழிவாங்க அவருக்கு நெருக்கமான பப்லு, நீரஜ் மற்றும் மண்டலை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜய் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
