ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளுவிடம் விரைவில் வாக்குமூலம் பெற சிபிஐக்கு கோர்ட் உத்தரவு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளிடம் விரைவில் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு, உடல் நிலை காரணமாக தனி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மாஜிஸ்திரேட் நியமனம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 84 வயது தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்காக, சென்னை தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டை, டெல்லி தனி கோர்ட்டு நீதிபதி நியமனம் செய்து இருந்தார்.

ஏன் தயாளுவிடம் வாக்குமூலம் பெறவில்லை?
இந்த நிலையில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தயாளு அம்மாளிடம் வாக்குமூலம் பெறாமல் இருப்பது பற்றி சுட்டிக்காட்டிய நீதிபதி சைனி, இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

சிபிஐக்கு கோர்ட் உத்தரவு
சென்னையில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு, தயாளு அம்மாளிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ.க்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

சென்னைக்கும் அனுப்புங்கள்
இந்த உத்தரவின் நகலை உடனடியாக சென்னை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர் உத்தரவிட்டார்.

சிபிஐ அதிகாரி வாக்குமூலம்
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு வி.எம்.மிட்டலிடம் நேற்றைய விசாரணையின்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
