டெல்லியில் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைவார் ஷீலா தீட்சித்- கருத்துக் கணிப்பு
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தோல்வியை தழுவுவார் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா டுடே குழுமத்திற்காக ஓஆர்ஜி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடிக்க வைத்த முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு 31 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 36 சதவீதம் பேரும், பாஜகவின் குப்தாவுக்கு 28 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏபிபி நியூஸ்-நீல்சன் கருத்துக்கணிப்பிலும் நியூ டெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைவார் என்றே முடிவுகள் வந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நிஜமானால் ஷீலாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
ஓஆர்ஜி கருத்துக்கணிப்பின்படி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பாஜகவுக்கு 41 இடங்களும், காங்கிரஸுக்கு 20 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்குமாம். நீல்சன் கருத்துக்கணிப்பின்படி பாஜகவுக்கு 37 இடங்களும், காங்கிரஸுக்கு 16 இடங்களும், ஆத் ஆத்மி கட்சிக்கு 15 இடங்களும் கிடைக்குமாம்.
கருத்துக்கணிப்பின்படி வடக்கு டெல்லியில் மொத்தமுள்ள 18 இடங்களில் 14 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், மீதமுள்ள 4 இடங்களில் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தலா 2 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிகிறது. பழைய டெல்லியில் உள்ள 4 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றுமாம்.
மேலும் கிழக்கு டெல்லியில் உள்ள 16 இடங்களில் காங்கிரஸும், பாஜகவும் தலா 6 இடங்களில் வெற்றி பெறுமாம். வடக்கு டெல்லியில் மொத்தமுள்ள 12 இடங்களில் பாஜக 8 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும் அமோக வெற்றி பெறுமாம்.
இது தவிர 17 இடங்களை கொண்ட மேற்கு டெல்லியில் பாஜக 8 இடங்களை கைப்பற்றுமாம். மேலும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெறுமாம்.
டெல்லி முதல்வர் வேட்பாளர்களில் பாஜகவின் ஹர்ஷ்வர்தனுக்கு 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஷீலாவுக்கு 29 சதவீதம் பேரும், கெஜ்ரிவாலுக்கு 25 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications