தருண் தேஜ்பாலுக்கு உடனடியாக முன் ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு- வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

பாலியல் புகாரில் சிக்கிய தருண் தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி சுனிதா குப்தாவின் முன் வந்தது. தருண் தேஜ்பால் சார்பில் வழக்கறிஞர்கள் கே.டி.எஸ்.துளசி மற்றும் கீதா லூத்ரா ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது துளசி, இந்த வழக்கு அரசியலாக்கப்படுவதால், எங்களுக்கு இடைக்காலத் தடை பெற உரிமை உள்ளது. எனவே, இந்த முன் ஜாமீன் மனுவின் மீதான விசாரணை முடியும் வரை மனுதாரரின் கைதுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கோவா போலீசார், குற்றவாளி மீது எழுந்திருப்பது மிகவும் கடுமையான புகார் என்பதால் அதை ஏற்க முடியாது என்றனர். டெல்லி போலீசும் மறுப்பு தெரிவித்ததால் தேஜ்பாலின் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
மேலும், தேஜ்பாலின் மனுவுக்கான பதிலை இன்று தாக்கல் செய்யும்படி கோவா போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி சுனிதா, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார். இன்று இந்த மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.
அத்துடன் தருண் தேஜ்பால் வெளிநாடு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அனைத்து குடியுரிமை சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேஜ்பால் வெளிநாடு செல்வதாக இருந்தால் காவல்துறையிடம் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும் என கோவா காவல்துறை டிஐஜி மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, தேஜ்பால் மீது பாலியல் அத்துமீறல் புகார் அளித்த பெண் பத்திரிகையாளரிடம் மும்பையில் கோவா போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதனால் தருண் தேஜ்பால் எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது
இந்நிலையில் டெஹல்கா நிறுவனத்துக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் அதன் மும்பை அலுவலகம் திடீரென மூடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications