விடிஞ்சிருச்சா, ஏம்மா ரீத்து உன் காலை கொஞ்சம் காட்டு.. டெய்லி மனைவி காலைத் தொட்டு வணங்கும் அமைச்சர்!
டெல்லி: மனைவி சொல்லே மந்திரம்.. வீட்டில் மனைவிதான் மந்திரி என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் டெல்லி அமைச்சர் ஒருவர் தனது மனைவியின் காலை தினசரி தொட்டு கும்பிட்டு விட்டுத்தான் மற்ற வேலையைப் பார்க்கவே ஆரம்பிக்கிறாராம்.
தனக்காக தனது மனைவி நிறைய தியாகம் செய்துள்ளதாக கூறும் அந்த அமைச்சர், அதற்கு நன்றிக் கடனாக திருமணமானது முதலே இவ்வாறு தினசரி மனைவி காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறாராம்.

அமைச்சரின் பெயர் சந்தீப் குமார், வயது 34. இவரது மனைவி பெயர் ரீத்து வர்மா. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருக்கிறார் சந்தீப் குமார்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். அங்குள்ள சரதந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவரும் கூட. தான் இன்று இருக்கும் நிலைக்கு வர கடுமையாக போராடியதாக கூறுகிறார் சந்தீப் குமார்.
மார்ச் 8ம் தேதி தான் தனது மனைவி மீது எந்த அளவுக்கு மரியாதையும், அன்பும் வைத்துள்ளேன் என்பதை டெல்லி தலைமைச் செயலகத்தில் நடந்த மகளிர் தின விழாவின்போது எடுத்துரைத்தார் சந்தீப் குமார். அப்போது அவர் கூறுகையில், எனக்காக எனது மனைவி நிறைய தியாகம் செய்துள்ளார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். தினசரி காலையில் முதல் வேலையாக எனது மனைவி காலைத் தொட்டுக் கும்பிடுவேன். பிறகுதான் மறு வேலை பார்ப்பேன் என்றார் சந்தீப் குமார். இதைக் கேட்டதும் கூடியிருந்தோர் நெகிழ்ந்து போயினர்.
இந்த சூப்பர் தம்பதிக்கு 2011ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி திருமணம் நடந்ததாம். அன்று முதலே இவ்வாறு தினசரி தொட்டுக் கும்பிட்டு வருகிறாராம் சந்தீப் குமார். சரி காலில் விழும்போது மனைவி என்ன சொல்வார் என்று சந்தீப் குமாரிடம் சிலர் கேட்டபோது, பெரும்பாலும் புன்னகைப்பார். சில நேரங்களில் வெற்றி உண்டாகட்டும் என்று சிரித்தபடி கூறுவார் என்றார்.
மனைவி ரீத்துவும் அதே பதிலையேக் கொடுத்தார். அவர் கூறுகையில், அவர் எனது காலில் விழும்போது நான் புன்னகைப்பேன். வெற்றி உண்டாகட்டும், குட்லக் என்று சில நேரங்களில் கூறுவேன் என்றார்.
இவர்களது திருமணம் காதல் திருமணம். டெல்லி தயாள் சிங் கல்லூரியில் படித்தபோதுதான் காதலிலில் விழுந்தனர். எட்டு வருடம் காதலித்த பின்னர் திருமணம் செய்து கொண்டனராம்.












Click it and Unblock the Notifications