மோடி, நிதீஷை அரியணையில் அமர்த்திய பிரசாந்த் கிஷோர், காங்கிரசுக்கு களப்பணியாற்ற தயார்
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கான பிரசார யுத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுப்பார் எனக் கூறப்படுகிறது. இவர் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கும், பீகார் தேர்தலில் நிதீஷ் குமார் கூட்டணிக்கும் யுக்திகளை வகுத்து அவற்றை வெற்றிபெறச் செய்தவர்.
கடந்த, 2014ல் நடந்த மக்களவை தேர்தலில், பா.ஜகவுக்கு பிரச்சார யுக்திகளை வகுத்து, மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைக்க பெருமளவுக்கு உதவியர் பிரசாந்த் கிஷோர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கான பிரசார வியூக குழுவிற்கு அவர் பொறுப்பேற்றார். அங்கும் அவருக்கு வெற்றியே கிடைத்தது.

கேபினட் அந்தஸ்து
இதனால் மகிழ்ச்சியடைந்த நிதீஷ்குமார், பிரசாந்த் கிஷோரை கவுரவிக்கும் வகையில், அவரை, கொள்கை மற்றும் செயலாக்கத்துக்கான ஆலோசகராக நிதிஷ் குமார் நியமித்தார். அமைச்சர் பதவிக்கு இணையான சலுகைகள் அனைத்தும் கிஷேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரசிலும் டிமாண்ட்
இந்நிலையில், பஞ்சாபில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சார திட்டங்களை வகுத்துத் தரும் பணிக்கு உதவும்படி, பிரசாந்த் கிஷோரை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் அணுகியுள்ளார்.

நம்பிக்கை
காங்கிரஸ் பொதுச் செயலர் ஷகீல் அகமது இதுகுறித்து கூறுகையில் "பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பாக, பிரசாந்த் கிஷோரிடம் பேசியிருக்கிறோம். பஞ்சாப் மாநில காங்கிரஸ் குறித்து, கிஷோர் தலைமையிலான குழுவினர், முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். வரும் மார்ச் முதல், காங்கிரசுக்காக, கிஷோர், பணியாற்ற தொடங்குவார் என நம்புகிறோம்" என்றார்.

திமுகவிலும் வான்டட்
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களுக்கு வியூகம் வகுத்துத்தர கேட்டு கிஷோரை திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications