யாரையும் பார்க்க விரும்பாத ஜெயலலிதாவை சந்திக்க விரும்பும் தேவே கவுடா
பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க முன்னாள் பிரதமர் தேவே கவுடா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என்று பலர் சிறைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதில் ஜெயலலிதா பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமே அவரை சந்திக்க அனுமதி அளிக்கப்படுவதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவை சந்திக்க முன்னாள் பிரதமர் தேவே கவுடா விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரை சந்திக்க விரும்பினால் நாங்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறோம் என்று ரெட்டி தேவே கவுடாவிடம் தெரிவித்துள்ளாராம்.
முன்னதாக தேவே கவுடாவின் விருப்பதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க மதச்சார்பற்ற ஜனதாதள எம்.பி. குபேந்திர ரெட்டி திங்கட்கிழமை சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவரால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications