மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்- சிவசேனாவின் 12 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!
மும்பை: மகாராஷ்டிராவின் ஆளும் பாரதிய ஜனதா அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அக்கட்சியின் 25 ஆண்டுகால கூட்டணியாக இருந்த சிவசேனாவின் 12 பேர் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
மகாராஷ்டிராவில் 25 ஆண்டு காலமாக கூட்டணி வைத்திருந்த பாஜக- சிவசேனா கட்சிகளுக்கு இடையே சட்டசபை தேர்தலில் மோதல் ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. இதனால் இரு கட்சிகளும் தனித்தனியே தேர்தலை சந்தித்தன.

மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானது. சிவசேனா 63 இடங்களுடன் 2-வது இடத்தை கைப்பற்றியது. காங்கிரஸ் 42 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளையும் பெற்றன.
இதனால் ஆட்சி அமைக்க யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அரசை அமைக்க மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கின. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், கடந்த அக்டோபர் 31-ந் தேதி பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 10 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவை ஏற்று கடந்த மாதம் 12-ந் தேதி பாஜக அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அப்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுவிட்டதாக சபாநாயகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சபாநாயகரின் இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்தன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் நிலையான அரசை உருவாக்கி கொள்ள சிவசேனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாஜக முன்வந்தது. தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு உடன்பாடு ஏற்பட்டது.
பாஜக அரசில் பங்கேற்க சிவசேனா சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சிவசேனாவுக்கு 12 அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்பட உள்ளது. பாஜக - சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருப்பதால் மகாராஷ்டிர அரசின் பலம் 184 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications