திவாகரன் மகன் ஜெயானந்த் திருமணம்- பரோல் கேட்ட சசிகலா?
ஜெயானந்த் திருமணத்திற்கு வர பரோல் கேட்ட சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளார் ஜெயராம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பாஸ்கரன் மகளுடன் திவாகரன் மகன் ஜெயானந்திற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு வருவதற்காக சசிகலா பரோல் கேட்டதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் சிறை நிர்வாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக நிர்வாகம், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்தார் சசிகலா. அதிர்ஷ்டம் கை கூடவில்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு தீர்ப்பினால் பெங்களூரு சிறை சென்றார்.
ஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயாலாளராக நியமித்தார் சசிகலா. கட்சி தினகரன் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அவரிடம், திவாகரனின் மகன் ஜெயானந்த்துக்கு அதிமுகவில் மாநில அளவிலான பதவி கொடுக்க வேண்டும் என அவரது தாய்மாமனும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் கோரிக்கை வைத்தார்.
அதை நிராகரித்த தினகரன், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல்களால் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே விரிசல் அதிகமானது.

மகாதேவன் மரணம்
சசிகலா, திவாகரன் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பினால் மரணமடைந்தார். இந்த மரணத்திற்கு சசிகலா பரோலில் வெளி வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் பரோல் மறுக்கப்பட்டதால் சசிகலா வரவில்லை. தினகரனும், சொந்த பந்தங்கள் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளாமல் சென்று இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். திவாகரனுடன் பேசக்கூட இல்லையாம்.

லஞ்ச வழக்கு
இந்த நிலையில்தான் இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிக்கினார் தினகரன். திகார் சிறையிலும் அடைக்கப்பட்டார். தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியதால் பல அணிகள் அதிமுகவில் உருவானது.

ஜெயானந்த் - விவேக் மோதல்
இதற்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இது தாமதமான முடிவு என்றாலும் சரியான முடிவு என பதிவிட்டார். இதற்கு பதிலடி தரும் வகையில், நடப்பவை கழகத்தின் நன்மைக்கானவை அல்ல. மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும் என இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் பதிவிட்டார். சசிகலா குடும்ப வாரிசுகள் சமூக வலைத்தளத்தில் இப்படி சண்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணம் முடிவு
இந்த சூழ்நிலையில்தான் திவாகரனின் மகன் ஜெயானந்த் துக்கும், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகளுக்கும் திருமணம் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறப்பட்டது. இந்த திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

பரோல் நிராகரிப்பு
திருமணத்தில் பங்கேற்க மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கேட்டதாகவும் ஆனால், அந்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டதாக சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் ஜெயராம் உறுதிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications