அயோத்தி போகப்போறீங்களா.. அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து நேரடி விமான சேவை
லக்னோ: ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்படுகிறது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக இந்த விமான நிலையம் ரூ.1,450 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையம் முழுவதும் வண்ண அலங்காரங்கள், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஓவியங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடக்கிறது. இதனையடுத்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தற்போது அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. கடந்த 6 ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்க தொடங்கியுள்ளது.
இதேபோல், அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு வரும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது, "ராமர் கோவில் வரும் 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இதனால் கோவில் திறக்கப்பட்ட பின்னர் அயோத்திக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. இதேபோல் லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளது" என்று கூறப்பட்டது.
ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் புனித பயணத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல நாட்டின் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications