கொல்கத்தா கொடூரம்.. பெண் மருத்துவர் கொலையை கண்டித்து மருத்துவர்கள் நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொலையை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர்.
கொலை: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறினர்.

போராட்டம்: இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், உயிரிழந்த சக மருத்துவருக்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர்.
கைது: இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று சிசிடிவி கேமராக்களை பரிசோதித்த அவர்கள், ப்ளூடூத் இயர்ஃபோனுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் திரும்ப வெளியே செல்லும்போது அவர் காதுகளில் ப்ளூடூத் இயர்ஃபோன் இல்லை. அது மருத்துவரின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
விசாரணை: இந்த கொலை அதிகாலை 3-6 மணிக்குள் நடந்திருக்கிறது. சந்தேகத்திற்குரிய நபர் மருத்துவமனைக்குள் நுழைந்ததும், வெளியேறியதும் இதே நேரத்தில்தான். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த மருத்துவரின் கழுத்து எலும்பு உடைந்திருக்கிறது. எனவே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.
வழக்கு: இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இதனையடுத்து கடந்த 14ம் தேதி சிபிஐ, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. ஆனாலும் மருத்துவர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் தொடங்கிய 5 நாட்களில் நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஸ்டிரைக்: இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்திய மருத்துவர்கள் சங்கம் இது குறித்து கூறுகையில், "கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். இதில், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு: இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும்(TNGDA) இணைந்து இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தை நடத்துகின்றன. அதேபோல அரசு மருத்துவமனைகளில் காலை 7.30-8.30 என ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அடையாள போராட்டத்தை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications