கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் சிபாரிசு: தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லி: தேர்தல் நடந்து முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டன. வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 14ம் தேதி வரை 9 கட்டங்களாக இத்தேர்தல் நடத்தப் பட உள்ளது. மே 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன.

நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் பதிலளித்தார்.
அப்போது, தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கப்படுமா? என்பது குறித்தான கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது :-
எங்களது அதிகாரம்...
கருத்து கணிப்புக்கு தடை விதிப்பது பற்றி நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள் கருத்து கணிப்பு வெளியிடுவதை தடை செய்வதற்கு மட்டுமே தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது.
சிபாரிசு....
இருப்பினும், தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கடைசிக்கட்ட ஓட்டுப்பதிவு முடிவடையும் வரை கருத்து கணிப்புக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். அட்டர்னி ஜெனரல் வாகன்வதியும் இந்த யோசனையை ஆதரித்துள்ளார்.
பிந்தைய கருத்துக்கணிப்பு....
கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் யோசனை, முதல் முறையாக 2004-ம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மட்டுமே தடை செய்யப்பட்டது.
பணத்துக்கு செய்தி...
பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை தடுப்பதற்கு தற்போதைய சட்டத்தில் வழி இல்லை. இருப்பினும், அதை தேர்தல் குற்றமாக ஆக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது.
புகார்கள்...
பணம் பெற்று செய்தி வெளியிடுவதாக, பத்திரிகைகள் மீதான புகார்கள், பிரஸ் கவுன்சிலுக்கும், டெலிவிஷன் சேனல்கள் மீதான புகார்கள், தேசிய ஒலிபரப்பாளர்கள் சங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு...
வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி வெளியிட செய்கிறார்களா என்று செலவு கணக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதற்காக, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளோம். எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்.
ஆதாயம் பெறக்கூடாது...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன. எனவே, அனைவரும் சம வாய்ப்புடன் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.
எங்கள் அதிகாரம்...
ஆளுங்கட்சி தேவையற்ற ஆதாயம் அடையக்கூடாது என்பது, தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் அம்சங்களில் ஒன்றாகும். நடத்தை நெறிமுறைகளை அமல்படுத்துவதில், எங்கள் அதிகாரத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்' என இவ்வாறு வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications