நாங்கள் விரட்டப்பட்டோம்! தாக்கப்பட்டோம்! கலங்க வைத்த வங்கதேச இந்துக்கள்.. வலிமிகுந்த வரலாறு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய சுதந்திரத்தில் இருந்தே வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் சிக்கல், பிரச்சனைகள் எல்லை கடந்து இந்தியாவையும் பாதித்தது உண்டு. முக்கியமாக வங்கதேச எல்லையில் இருக்கும் மேற்கு வங்கத்தை வங்கதேச அரசியல் பாதித்தது வெகுவாக உண்டு.

சுதந்திரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பிரிவினையின் போது பல லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இடம்பெயர்ந்தனர். முக்கியமாக வங்கதேசத்தில் மைனாரிட்டிகளாக இருந்த இந்துக்கள் இந்தியா நோக்கி வந்தனர். வங்கதேசம் மட்டுமின்றி அசாம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கும் சாரை சாரையாக மக்கள் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

இத்தனை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே போன்ற ஒரு சூழ்நிலை தற்போது மீண்டும் ஏற்பட்டு உள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றத்தன்மை காரணமாக அங்கே மைனாரிட்டிகளாக இருக்கும் இந்துக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இருக்கும் பெங்காலி இந்துக்கள் தங்களின் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள சக இந்துக்களின் எதிர்காலம், அவர்களின் உரிமைகள் குறித்து கவலைப்பட தொடங்கி உள்ளனர்.

bangladesh sheikh hasina

வலிமிகுந்த வரலாறு: வங்கதேசத்தில் நடந்த.. கடந்தகால கொடுமைகளுக்கு சாட்சியாக இருந்த பல பெங்காலி இந்துக்களுடன் ஒன்இந்தியா சார்பாக நேரடியாக சென்று உரையாடினோம். அவர்கள் நம்மிடம் பகிர்ந்த ஒவ்வொரு தகவலும் உடலை சில்லிட வைத்தது.. அவர்கள் நம்மிடம் வங்கதேசத்தில் நடந்த வலிமிகுந்த வரலாற்றை பகிர்ந்த போது கண்களில் ஈரம் தொய்த்தது. அங்கே சிறுபான்மையின இந்துக்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்தனர்.

1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு தப்பி வந்த சுஷில் கங்கோபாத்யாய், வங்காளதேசத்தின் நோகாலி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த இந்து ஆவார். அங்கே வளமான வாழ்க்கையை வாழ்ந்த அவர்.. தனக்கு நேர்ந்த வலிமிகுந்த வரலாற்றை நினைவு கூர்ந்தார். எங்களுக்கு என்று ஒரு பெரிய குடும்பம் மற்றும் பரந்த நிலங்கள் சொந்தமாக இருந்தன. ஆனால் விடுதலைப் போரின் போது, ​​பாகிஸ்தான் இராணுவமும் ரஸாக்கர்களும் எங்களைத் தாக்கினர். வீடுகள் எரிக்கப்பட்டன, பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். எங்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டன. நாங்கள் சாலைகளில் விடப்பட்டோம், என்று நினைவு கூர்ந்தார். அவரது குரலில் சோகமும், வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றின் ஏக்கமும் இருந்தது.

சுதந்திரத்திற்குப் பின் சிறிது காலம் கழித்து வங்கதேசத்திற்கு சென்ற அவர்களுக்கு அங்கே அதிர்ச்சியே காத்து இருந்தது. வங்கதேசத்தின் பெரும்பான்மை சமூகத்தின் தொடர்ச்சியான விரோதம், அவர்கள் கொடுத்த அழுத்தம், இந்து மைனாரிட்டிகளிடம் காட்டிய பிரிவினை எல்லாம் சுஷில் கங்கோபாத்யாய் குடும்பத்தை அயர்ச்சி அடைய வைத்தது. கடைசியில் வேறு வழியே இன்றி அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக தஞ்சம் அடைந்தனர்.

தற்போது அங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பற்றி நம்மிடம் பேசிய சுஷில், "வங்கதேசத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது மனது கனக்கிறது. அங்கே கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகளைப் பார்த்தேன். இதுபோன்ற கொடூரம் கற்பனை செய்ய முடியாதது. ஒரு இந்தியனாக எனக்கு இது வருத்தத்தை உண்டாக்குகிறது.. அவர்களை உடனே காப்பாற்றக் கோருகிறேன். அங்கே பூர்வீகமாக பிறந்து வளர்ந்த இந்துக்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர், என்றார்.

சுஷிலுக்கு இப்போதும் 1971 நடந்த சம்பவங்களின் நினைவுகள் தெளிவாக உள்ளன... "எனக்கு 10 அல்லது 12 வயதுதான் இருக்கும். ரஸாகர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், ஆண்களின் உடலை நதிகளில் எறிந்து, எங்கள் தாய்மார்களை தாக்கி அவர்களிடம் அத்துமீறினர். பல பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பலாத்காரம் செய்தது. இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடுக்கள் அப்படியே இருக்கின்றன. என் நினைவில் இருந்து அந்த கொடூரங்கள் நகர மறுக்கின்றன."

அனிமா தாஸின் அதிர்ச்சி கதை: சுஷில் கதை ஒரு பக்கம் கண்ணீர் வரழைக்க.. வங்கதேசத்தின் பங்கானைச் சேர்ந்த அனிமா தாஸின் கதை உடம்பையே நடுங்க வைக்கிறது. வங்கதேசத்தை விட்டு வெளியேறியபோது கர்ப்பமாக இருந்த பங்கானைச் சேர்ந்த அனிமா தாஸ் தான் சந்தித்த கொடுமையான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், " அப்போது என் மகன் குழந்தை. நான் கர்ப்பமாக இருந்தேன். என் மகள் என் வயிற்றில் இருந்தாள். பிரிவினையின் போது.. மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.. அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பயத்தில், என் மாமனார் எங்களை இந்தியாவுக்கு அனுப்பினார். அங்கே நடந்த வன்முறைகள்.. முக்கியமாக ஆண்கள் மீதான என்னுடைய கண்ணோட்டத்தையே மாற்றியது. என் மனதில் தீராத வலியை அந்த சம்பவங்கள் ஏற்படுத்தியது. நான் உயிரை பிடித்துக்கொண்டு இந்தியா வந்தேன். நான் வங்கதேசத்திற்கு சில முறை சென்றிருக்கிறேன், ஆனால் மீண்டும் அங்கு வசிக்கும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. அங்கிருந்து நாங்கள் இந்தியா வந்த போது எங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கவே முடியாது.

வங்கதேசத்தில் இருந்து உயிரை பிடித்துக்கொண்டு இந்தியாவிற்கு அகதிகளாக வந்து சேர்ந்த பல நபர்கள் இதேபோன்ற உணர்வுகளை எதிரொலித்தனர். பலர் தங்கள் மூதாதையர் வீடுகளையும்.. சொத்துக்களையும்.. கஷ்டப்பட்டு வாங்கிய பூர்வீக நிலத்தையும்.. நினைவுகளையும் விட்டுவிட்டு மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு தப்பி வந்தனர். இடப்பெயர்ச்சியின் அடிப்படை வலி இருந்தாலும், இந்தியா வழங்கும் பாதுகாப்புக்கு நிவாரணம் மற்றும் நன்றி உணர்வும் அவர்களுக்கு அதிகமாக ருக்கிறது.

தற்போது நிலவும் மோசமான அரசியல் சூழலுக்கு இடையே.. வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு இங்கே அகதிகளாக வந்த இந்துக்கள் கொடுக்கும் ஒருமித்த அறிவுரை: இந்தியாவில் தஞ்சம் அடையுங்கள் என்பதே!

வங்கதேசத்தில் இருந்து அகதியாக வந்து இந்தியாவில் குடியேறியவரின் மகனான ஹரதன் பிஸ்வாஸ் ஒன்இந்தியாவிடம் பேசுகையில், அங்கே நடக்கும் தொடர் துன்புறுத்தல்கள்.. சுழற்சி போல மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த சம்பவங்கள்.. இந்து சமூகத்தை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கிறது. வங்கதேசத்தில் நடக்கும் கொடுமைகள் காரணமாக பலர் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

இந்துக்கள் வரலாற்று ரீதியாக வங்கதேசத்தில் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர், சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து.. விடுதலைப் போர் மற்றும் அதற்கு பின் பிரிவினை.. பின் வங்கதேச விடுதலை.. இப்போது அங்கே நிலவும் அரசியல் பிரச்சனைகள் எல்லாம் இந்துக்களுக்கு சவாலாக மாறி உள்ளது.

1956 இல் இந்தியா வந்த பரேஷ் தாஸ் நம்மிடம் வேதனையான ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "என் தாத்தா என் கண் முன்னாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். பயத்தில் எங்கள் நிலத்தைக் கைவிட்டோம். என் உறவினரை என் முன்னாலேயே அவர்கள் தாக்கினர். நாங்கள் இப்போது இந்தியாவில் நிம்மதியாக வாழ்ந்தாலும், வங்கதேசத்தில் உள்ள எங்கள் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கூட நிலத் தகராறில் என் மாமா கொல்லப்பட்டார். அந்த அளவிற்கு அங்கே தொடர்ந்து இந்துக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.", என்று கூறியுள்ளார்.

தலையிட வேண்டும் என்று கோரிக்கை; மேற்கு வங்கத்தில் நியூடவுனுக்கு அருகில் வசிக்கும் ரஷோமோய் பிஸ்வாஸ், 1971க்கு பின் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை விவரித்தார். "அந்த நாட்டில் இந்துவாக இருப்பது ஒரு குற்றம். சுதந்திரத்திற்குப் பிறகும், எங்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. பாகிஸ்தானிய இராணுவமும் ஜமாத் படைகளும் எங்களை குறிவைத்து, இந்துக்களின் வீடுகளை தாக்குதலுக்கு குறிவைத்தன நாங்கள் கடுமையான கொடுமைகளை எதிர்கொண்டோம்.

எனது குடும்பத்தினர் இரவு நேரங்களில் உணவு இல்லாமல் தலைமறைவாக இருந்தனர். நாங்கள் இப்போது இந்தியாவில் நிம்மதியாக வாழும் போது, ​​எங்கள் உறவினர்கள் பலர் வங்கதேசத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு தலையிட்டு, அங்குள்ள இந்துக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று கோரிக்கைவிடுத்துள்ளார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+