ரயில் பெட்டிகளை விட்டு 1 கி.மீ தனியாக ஓடிய இன்ஜின்: பயணிகள் பீதி
பெங்களூர்: மைசூரிலிருந்து பெங்களூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகளை விட்டுவிட்டு இன்ஜின் தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ், ரயில், இன்று காலை மைசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. இரு நகரங்களுக்கும் நடுவே மண்டியா நகர ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து நின்றது. அப்போது சில பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கினர், பெங்களூர் செல்லும் பயணிகள் பலரும் ஏறினர்.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. ரயில் பெட்டிகளுடன் இருந்த இன்ஜினின் இணைப்பு துண்டாகி, இன்ஜின் மட்டும் பெங்களூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். அதற்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இன்ஜின் சென்றுவிட்டது.
அதன்பிறகே நடந்த விபரீதத்தை உணர்ந்த இன்ஜின் டிரைவர் இன்ஜினை நிறுத்தினார். ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டியுடன், இன்ஜின் பொருத்தப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது இதுபோல விபத்து ஏற்பட்டிருந்தால் நிலைமை என்னவாயிருக்குமோ என்று பயணிகள் அச்சத்துடன் பேசிக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications