எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு விளக்கமளித்து இரு அவைகளில் உரையாற்றியதை அடுத்து கடந்த 11 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்தது..

பட்ஜெட் 2 வது அமர்வு
இதனை தொடர்ந்து இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கூடியது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பிலான இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் விபரங்கள் குறித்து படிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜம்மு காஷ்மீர் நிதிநிலை அறிக்கை தாக்கல்:
ஆனால், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மீறி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் துணை மானியக் கோரிக்கைகளையும் கூடுதல் மானியக் கோரிக்கைகளையும் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான துணை மானியமாக ரூ.18,860.32 கோடிக்கான அறிக்கையை அவர் சமர்பித்தார். அத்துடன் ஒரேநாளில் மக்களவையில் விவாதங்களை நடத்துவதற்கு தடையாக உள்ள சில விதிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனிநபர் தீர்மானத்தை அவர் முன் மொழிந்தார்.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு
இதற்கு காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி.பிரேமசந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில விதிமுறைகள் மக்களவையில் சட்டத்திருத்தம் செய்வதற்கும் அப்பாற்பட்டவை எனக்கூறிய மணிஷ் திவாரி, ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு முன்வைத்து இருக்கும் திட்டங்கள் குறித்து வாசிக்க உறுப்பினர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது." என்றார்

2 மணி நேரம் தாமதமாக விவாதம்
இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "2 மணி நேரம் கழித்து விவாதம் நடைபெறும்" என்றார். அப்போது பேசிய தற்காலிக சபாநாயகர் ராஜேந்திர அகர்வால், "சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை நடவடிக்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அவை நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.

நகல் தராமல் விவாதிக்க சொன்னால் எப்படி?
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, "பட்ஜெட் தொடர்பான எந்த நகலையும் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. இந்த விவாதத்தை செவ்வாய் கிழமை மாற்றினால் பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து படித்துவிட்டு விவாதிக்க உதவியாக இருக்கும்." என்றார். பின்னர் பேசிய கேரள எம்.பி., பிரேமசந்திரன், "நிதியமைச்சர் துணை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக இந்த அமர்வில் முன்மொழிந்ததது சட்டத்துக்கு புறம்பானது" எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications