டெல்லியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை: பாதுகாவலர்கள் 2 பேர் படுகாயம்
டெல்லி: டெல்லியில் இந்திய தேசிய லோக் தள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பரத் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் மத வழிபாடு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லோக் தள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பரத் சிங்(38) கலந்து கொண்டார். 2009ம் ஆண்டு நஜாப்கர் பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பரத் சிங்.

இந்நிலையில் மத வழிபாடு நிகழ்ச்சியில் இருந்தபோது இரவு 8.10 மணிக்கு ஆயுதம் ஏந்திய 6 பேர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் பரத் சிங்கை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் பரத் சிங்கின் பாதுகாவலர்கள் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
படுகாயம் அடைந்த பரத் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குர்காவ்னில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரத் சிகிச்சை பலனின்றி பலியானார்.
டெல்லியின் பிரபல ரவுடியான கிஷன் பெஹல்வானின் தம்பி தான் பரத் சிங். கிஷன் மீது 24க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ரவுடிகளுக்கு இடையேயான மோதலில் தான் பரத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான ரவுடி உதய்வீர் என்கிற காளி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு பரத் சிங் அவரது அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது இடது தோள்பட்டை மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்தும் அவர் பிழைத்துக் கொண்டார். இம்முறை அவரது தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார்.












Click it and Unblock the Notifications