முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் நகை, பணம் கொள்ளை

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, பெங்களூர் பனசங்கரியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேவேகவுடா, பிரதமராக பதவி வகித்தவர் என்பதால், அவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஆசனம்மா கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தேவேகவுடா தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த தேவேகவுடாவின் குடும்பத்தினர், பூஜை அறையில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் ரேவண்ணா, உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தேவேகவுடாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தேவேகவுடாவின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர், பூஜை அறையில் இருந்த நகை, பணம், பொருட்களை கொள்ளையடித்ததாக தெரியவந்தது.
அந்த வேலைக்காரர் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூடுவை சேர்ந்தவர் என்று தெரியவந்து உள்ளது. எனவே அவரை பிடிக்க அரக்கல்கூடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications