இப்படியும் ஒரு அமைச்சர்.. போலீஸார் போட்ட அபராதத்தை சத்தமின்றி கட்டினார்!

Subscribe to Oneindia Tamil

George allows cops to do job, pays fine
பெங்களூர்: கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், போக்குவரத்து விதி மீறலில் தனது கார் சிக்கியதைத் தொடர்ந்து அதற்கான அபராதத் தொகையை போலீஸாரிடம் அமைதியாக கட்டிச் சென்ற செயல், பெங்களூரில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதை விட முக்கியமாக, தனது காரை வழிமறித்து நிறுத்தி அபராதம் கட்டுமாறு கூறிய இரண்டு போக்குவரத்து போலீஸாரை அவர் நேரில் அழைத்தும் பாராட்டி அனுப்பியுள்ளார்.

டிசம்பர் 7ம் தேதி இரவு ஏழரை மணியளவில் ஜார்ஜின் ஆடி கார், பெங்களூர் அசோக்நகர் டிசோசா சந்திப்பில், சிக்னலுக்காக நின்றுள்ளது. அப்போது அந்தக் காரை நோக்கி உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ், காவலர் பவன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

அதற்கு மேல் நடந்தது குறித்து ஸ்ரீனிவாஸ் கூறுகையில், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகனங்கள் குறித்த ஆய்வில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அந்த ஆடி கார், ஒரு இடத்தில் தவறான இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததற்காக வழக்கில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆடி காரை நாங்கள் வழிமறித்து நிறுத்தினோம். பின்னர் டிரைவரிடம், உங்களது கார் விதிமுறையை மீறி நிறுத்தப்பட்டிருந்ததால், ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்று டிரைவரிடம் கூறினோம். ஆனால் டிரைவர் முதலில் பணத்தைக் கட்ட மறுத்தார்.

அந்தக் கார் மீதான வழக்கின் விவரத்தை எடுத்துக் கூறியும் கூட அவர் கட்ட மறுத்தார். இருந்தாலும் நாங்கள் கண்டிப்பாக அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று கூறி வாகனத்தை மேற்கொண்டு செல்லவும் அனுமதிக்காமல் நிறுத்தி வைத்தோம். பின்னர் அவர் பணத்தைக் கட்டினார், இதையடுத்து அவருக்கு ரசீதையும் கொடுத்து காரை அனுமதித்தோம் என்றார்.

அந்த ஆடி காரில் அப்போது அமைச்சர் ஜார்ஜ் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். டிரைவர், போக்குவரத்து போலீஸாரின் பிடிவாதப் போக்கால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அமைச்சரைப் பார்த்தார். அமைச்சர் எதுவும் பேசாமல், டிரைவரிடம் ரூ. 100ஐ எடுத்துக் கொடுத்து அபராதத்தைக் கட்டுமாறு பணித்தார். இதையடுத்தே டிரைவர் அபராதத்தை செலுத்தினார்.

ஆனால் அந்த ஆடி கார் அமைச்சருடையது என்றோ, காருக்குள் அமைச்சர் அமர்ந்திருந்ததோ, உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸுக்கும் தெரியாது, பவனுக்கும் தெரியாதாம்.

அடுத்த நாள் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் ஜார்ஜ், உடனடியாக அசோக்நகர் இன்ஸ்பெக்டரை தன்னை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். வரும்போது கூடவே ஸ்ரீனிவாஸ் மற்றும் பவனையும் கூட்டி வருமாறும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் ஸ்ரீனிவாஸும், பவனும் குழப்பமும் பீதியும் அடைந்தனராம். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று அவர்கள் இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளனர். ஆனால் அமைச்சர் கூப்பிட்டதால் கூடப் போயுள்ளனர்.

அதற்குப் பிறகு நடந்தது குறித்து ஸ்ரீனிவாஸ் கூறுகையில், நாங்கள் அமைச்சரின் அறைக்குப் போனபோது, அமைச்சர் எழுந்து நின்று, எங்களை நோக்கி வந்து எனது கைகளைப் பிடித்து குலுக்கி பாராட்டினார். இதனால் எனக்கு மேலும் அதிர்ச்சியானது. பின்னர் அவரே, உங்களது கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். நீங்கள் சிக்னலில் நிறுத்திய கார் என்னுடையதுதான். நான்தான் பணத்தைக் கொடுத்து அபராதத்தைக் கட்டுமாறு டிரைவரிடம் கூறினேன் என்றார். அதைக் கேட்டு நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன் என்றார் ஸ்ரீனிவாஸ்.

இதுகுறித்து அமைச்சர் ஜார்ஜ் கூறுகையில், போக்குவரத்து போலீஸாரின் கடமை உணர்ச்சி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் அபராதமும் கட்டினேன், அவர்களை நேரில் அழைத்தும் பாராட்டினேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+