கோவா தேர்தல் முடிவுகள்.. "காங். உறுப்பினர்கள் கட்சி மாறுவார்களா?" பாஜக அமைச்சர் பரபர கருத்து
கோவா: கோவா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கோவா அமைச்சர் விஸ்வஜித் ரானே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் கோவாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும்.

தொங்கு சட்டசபை
இருப்பினும், தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது என்றே கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே, திரிணாமுல் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங். பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளது. இருப்பினும் தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

2017 கோவா தேர்தல்
கடந்த 2017ஆம் ஆண்டில், காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற போதிலும், உள்ளூர் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அமைத்தது. மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2 ஆண்டுகளில், அதாவது 2019இல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 15 பேர் அப்படியே பாஜகவுக்குத் தாவினர். காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பாபு காவ்லேகர் பாஜகவில் இணைந்து துணை முதல்வராகப் பதவியேற்றார்.

கட்சி மாறுவது காங்கிரஸ்
இந்நிலையில், இது குறித்து கோவா அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில், "கோவாவில் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பண்பு. காங்கிரஸ் தலைவர்கள் மிக எளிதாகக் கட்சி மாறுகிறார்கள் என்றால், அது பாஜகவின் பிரச்சினை அல்ல. வேட்பாளர்களிடம் காங்கிரஸ் கட்சி சத்தியம் எல்லாம் பெற்றுள்ளது., அவர்கள் கூட்டணிக்காகப் பேசுகிறார்கள், தங்கள் எம்எல்ஏக்கள் வேறு பக்கம் போகக் கூடாது எனப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே என்ன நடக்கும் என்பது தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.

காங். தலைவர்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்ததைப் போன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகக் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மூத்த தலைவர்களைக் கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை வடக்கு கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல கிங் மேக்கராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

விஸ்வஜித் ரானே
கோவா அமைச்சர் விஸ்வஜித் ரானே இது குறித்துக் கூறுகையில், "பாஜகவுக்கு இதுபோன்ற ரிசார்ட் அரசியல் தேவையில்லை. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். பாஜக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறும் கண்டிப்பாக ஆட்சியை மீண்டும் தக்க வைப்போம்" என்று அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் பிராந்திய கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications