போடி அருகே ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: தமிழகத்தின் போடி அருகே ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி கூடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
நியூட்ரினோ என்பது மிகக்குறைந்த வினைபுரியும் ஆற்றல் வகையை சேர்ந்த அடிப்படை துகள்களுள் ஒன்று ஆகும். நியூட்ரினோக்கள் பிரபஞ்சத்தின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் உருவாகி அனைத்து திசைகளிலும் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. நம் உடலில் கூட, தன்னிடமுள்ள பொட்டாசியம் தாதுவை பயன்படுத்தி ஒரு நொடிக்கு பல லட்சம் நியூட்ரினோக்கள் உற்பத்தி செய்து அனைத்து திசைகளிலும் செலுத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரபஞ்சத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இந்த நியூட்ரினோக்கள் சென்று திரும்புவதால் இதனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்ற வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பூமி அதிர்ச்சி, எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. இதற்கு இந்த ஆராய்ச்சி பலன் அளிக்கும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. அதேபோன்று எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம் பெற முடியும். உலக நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பதோடு மட்டும் இல்லாமல் விஞ்ஞான ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பயன் அளிக்கும் திட்டமாக நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமையும் திட்டம் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க பல்வேறு இடங்களை தேர்வு செய்ததில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமம் புதுக்கோட்டை குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பரப்பர் மலைப்பகுதி தேர்வு செய்யப்பட்டது.
இங்கு இந்திய அணுசக்தி ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு அடிப்படை கட்டுமான வசதிகள் தொடர்பான ஆதரவை தமிழக அரசு வழங்கும். இதற்காக சாலை அமைப்பது, சுற்றுச்சுவர் அமைப்பது போன்ற பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் நாபா மண்டல், நியூட்ரினோ ஆராய்ச்சி திட்ட இயக்குனராக செயல்படுவார். முன்பு கோலார் தங்க சுரங்கத்தில் பூமிக்கு அடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். இந்த திட்டத்தை சார்ந்து மதுரையில் இயற்பியல் உயர் எரிசக்தி மையம் ஒன்று அமைக்கப்படும்.
இந்த திட்டம் இந்தியாவில் 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அமைகிறது. மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை தலைமையகமாக கொண்டு உள்ள இந்த திட்டத்தில் இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஆய்வு நிலையங்கள் பங்கேற்க உள்ளது. 90-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.
நியூட்ரினோ துகள்களை மற்ற காஸ்மிக் துகள்களில் இருந்து தனிப்படுத்தி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதற்காக மலைக்குள் 2 கிலோ மீட்டர் தூரம் குகைப்பாதை அமைத்து அங்கு 400 அடி நீளமும், 80 அடி அகலமும், 75 அடி உயரமும் கொண்ட முக்கிய குகைக்கூடமும், 170 அடி நீளமும், 38 அடி அகலமும், 15 அடி உயரமும் கொண்ட துணை குகைக்கூடமும் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பூமிக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடம்பெறும்.












Click it and Unblock the Notifications