Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடிகட்டி ஆண்ட குஜராத்தில் காங்.க்கு மரண அடி! சவக்குழி தோண்டிய ஆம் ஆத்மி, ஓவைசி கட்சி!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலிலும் பாஜக அமோக வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேர்தல் வரலாற்றில் சட்டசபை தேர்தல்களில் 7-வது முறையாக தொடர்ந்து வென்று சரித்திரம் படைத்திருக்கிறது பாஜக.

நாடு விடுதலை அடைந்த காலத்தில் குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்படவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ல் இன்றைய குஜராத்தின் ராஜ்கோட் நகரை தலைநகராகக் கொண்ட United State of Kathiawar என்ற செளராஷ்டிரா அல்லது கத்திவார் தீபகற்பம் உருவாக்கப்பட்டது. பாவ்நகர், பரோடா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய சமஸ்தானங்களை ஒருங்கிணைந்து இந்த செளராஷ்டிரா ஸ்டேட் உருவாக்கப்பட்டது. அதேபோல் பூஜ் நகரை தலைநகராகக் கொண்டு கட்ச் ஸ்டேட் 1947-ல் உருவாக்கப்பட்டது. இதர இன்றைய குஜராத் பகுதிகள், பம்பாய் மாகாணத்தின் அங்கமாக இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குஜராத்தி, மராத்தி மொழிகள் பேசும் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பம்பாய் மாகாணமானது மகாராஷ்டிரா, குஜராத் என்ற இரு மாநிலங்கள் 1960-ல் உருவாகின.

 பாஜகவின் தோற்றம்

பாஜகவின் தோற்றம்

97 ஆண்டுகளுக்கு முன்னர் (1925-ல்) உருவான ராஷ்டிரிய ஸ்யம் சேவாக் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் (RSS) அரசியல் கட்சியாக 1951-ல் பாரதிய ஜன் சங் உருவானது. அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற நீதிக் கட்சி, பின்னர் திராவிடர் கழகம்.. அதில் இருந்து 1949-ல் திமுக உருவானதைப் போல பாரதிய ஜன் சங் (BJS) உதயமானது. ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படை கொள்கையே இந்துவாக ஒன்றிணைவோம் என்பது. இந்த முழக்கம் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பெரும் அளவு கை கொடுத்தது. பாரதிய ஜன் சங் உருவாக்கப்படும் வரை தேர்தல் அரசியலில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை. 1951-ம் ஆண்டு நாட்டின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜன் சங் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. அந்த பாரதிய ஜன் சங் கட்சிதான் 1980களில் பாரதிய ஜனதா கட்சியாக உருமாறியது.

குஜராத் முதல் சட்டசபை தேர்தல்

குஜராத் முதல் சட்டசபை தேர்தல்

குஜராத் மாநில சட்டசபைக்கு 1962-ம் ஆண்டு நடைபெற்றது. 1960-ம் ஆண்டு பம்பாய் மாகாண பிரிவினையின் போது 132 எம்.எல்.ஏக்களுடன் முதலாவது சட்டசபை அமைந்தது. இதனால் 1962-ல் நடைபெற்ற தேர்தல் குஜராத்தின் 2-வது தேர்தலாகும். அப்போது காங்கிரஸ், சுதந்திரா கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக குஜராத் தேர்தல் களத்தில் இருந்தன. சுதந்திரா கட்சி என்பது ராஜாஜியால் தொடங்கப்பட்டது. தனியார் தொழில் மயமாக்கல், அன்னிய முதலீடுகளை கொள்கையாக கொண்ட கட்சி. ஆகையால் குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநில தொழிலதிபர்களின் அமோக ஆதரவை சுதந்திரா கட்சி பெற்றிருந்தது. குஜராத்தின் முதல் சட்டசபை தேர்தலின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 154. காங்கிரஸ் 113 இடங்களிலும் சுதந்திரா கட்சி 26 தொகுதிகளிலும் வென்றது.

ஒரு சீட்டுடன் பாஜகவின் என்ட்ரி

ஒரு சீட்டுடன் பாஜகவின் என்ட்ரி

குஜராத் மாநில 3-வது சட்டசபை தேர்தல் 1967-ல் நடைபெற்றது. அப்போதும் சுதந்திரா கட்சி வலுவானதாக இருந்தது. 1967 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 93, சுதந்திரா கட்சி 66, பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3 இடங்களில் வென்றது. முதல் முறையாக இன்றைய பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜன் சங் குஜராத் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு 1 இடத்தில் வென்றது. அந்த தேர்தலில் பாரதிய ஜன் சங் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 1,20,147. மொத்த வாக்கு சதவீதம் 1.88%.

 ஜனதா மோர்ச்சா

ஜனதா மோர்ச்சா

1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஸ்தாபன காங்கிரஸ், சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி, பாரதிய ஜன் சங் இணைந்து மெகா கூட்டணியை அமைத்தது. இதுதான் ஜனதா மோர்ச்சா என அழைக்கப்பட்டது.

பாஜகவின் வெள்ளோட்டம்

பாஜகவின் வெள்ளோட்டம்

1972-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் 4-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின் போது மொத்த இடங்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி 2- ஆக பிளவுபட்டு இருந்தது. இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிரிந்து போட்டியிட்ட போதும் இந்திரா காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வென்றது. பாரதிய ஜன் சங் கட்சியானது 100 தொகுதிகளில் போட்டியிட்டு 69 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது. 3 இடங்களில்தான் பாரதிய ஜன் சங் வென்றது.

ஆட்டம் காண தொடங்கிய காங்கிரஸ்

ஆட்டம் காண தொடங்கிய காங்கிரஸ்

1974-ம் ஆண்டு தொடக்கத்தில் குஜராத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மிகப் பெரும் கிளர்ச்சி உருவானது. காங்கிரஸ் முதல்வராக இருந்த சிமன்பாய் பட்டேலுக்கு எதிரான கிளர்ச்சி தீவிரமானது. இதனால் சிமன்பாய் பட்டேல் தமது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் குஜராத் சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சுமார் ஓராண்டு காலம் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அப்போது மொரார்ஜி தேசாய், குஜராத்தின் சட்டசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். 1975-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நாடு எதிர்பார்க்காத பெரும் திருப்பம் ஏற்பட்டது. குஜராத் சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜன் சங்கை உள்ளடக்கிய ஜனதா மோர்ச்சா அமோக வெற்றியைப் பெற்றது. அந்த காலத்தில் நாட்டில் எமர்ஜென்சியை இந்திரா காந்தி அமல்படுத்தினார். எமர்ஜென்சியின் போது தமிழ்நாட்டின் திமுக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் தப்பி பிழைத்த ஒரே காங்கிரஸ் அல்லாத அரசு குஜராத்தின் ஜனதா மோர்ச்சா அரசுதான். அப்போது முதல்வராக இருந்தவர் பாபுபாய் பட்டேல். 9 மாதங்கள் இந்த ஆட்சி நீடித்தது. மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1977-ல் உயிர்த்தெழுந்த காங்கிரஸ்

1977-ல் உயிர்த்தெழுந்த காங்கிரஸ்

1977-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 141 இடங்களில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறியது. அப்போது பாரதிய ஜன் சங் 9 இடங்களில்தான் வென்றது. ஆனால் பா.ஜ.ச.வின் வாக்கு வங்கி 14.02% ஆக உயர்ந்தது. 1980-ல் பாரதிய ஜன் சங், பாரதிய ஜனதா கட்சியாக உருமாறியது. 1985 குஜராத் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்றது. அப்போது ஜனதா கட்சி 14 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களிலும் வென்றிருந்தது.

பாஜகவின் வேட்டை தொடங்கியது

பாஜகவின் வேட்டை தொடங்கியது

1980களின் இறுதியில் ஜனதா கட்சி விஸ்வரூபம் எடுத்திருந்தது. காங்கிரஸ் பெரும் சரிவில் இருந்தது. இந்த நிலையில் 1990-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் 70 இடங்களிலும் பாஜக 67 இடங்களிலும் வென்றன. காங்கிரஸுக்கு வெறும் 33 இடங்கள்தான் கிடைத்தது. 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருந்து பாரதிய ஜனதா கட்சி- காங்கிரஸ் என இரு கட்சி போட்டி மையம் கொண்டது குஜராத்தில். 1995-ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக தனித்தே 121 இடங்களில் வென்று ஆட்சியை அமைத்தது. பாஜகவின் முதல்வராக கேசுபாய் பட்டேல் பதவி ஏற்றார். அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்தன.

பாஜகவின் தொடர் வெற்றி 2022 வரை!

பாஜகவின் தொடர் வெற்றி 2022 வரை!

2002-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 127; 2007-ம் ஆண்டில் 117; 2012-ம் ஆண்டில் 115; 2017-ல் 99 என தொடர்ச்சியாக பாஜகவின் வெற்றி பயணம் தொடருகிறது. குஜராத்தில் சுமார் 27 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது பாஜக. 2017-ம் ஆண்டு பாஜகவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக அமோக இடங்களைப் பெறும் என்கின்றன.

 குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி முகம் ஏன்?

குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி முகம் ஏன்?

குஜராத்தில் காங்கிரஸுக்கு எப்போதும் ஓபிசி சமூக வாக்குகள் கிடைத்து வந்தன. குறிபாக தாகூர், கோலி சமூகங்கள், எஸ்சி- எஸ்டி, முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்து வந்தன. என்னதான் பாஜக 6 முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்திருந்தாலும் காங்கிரஸூக்கு சுமார் 40% வாக்குகள் நிலையானதாகவும் இருந்து வருகிறது. முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கி காலத்தில் சத்ரியா, ஹரிஜன், ஆதிவாசி- முஸ்லிம் வாக்குகள் என்கிற KHAM பார்முலா காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்தது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் மரணித்துவிட்டனர். குஜராத் மாநில காங்கிரஸ் உட்கட்சி பூசல் அக்கட்சியையே நிர்மூலமாக அழித்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் நகர்ப்புறம்- செமி அர்பன் பகுதிகளில் 60 தொகுதிகளில் காங்கிரஸ் ஒருமுறைகூட வெல்ல முடியாத நிலைமை உருவாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மூத்த அல்லது எஞ்சிய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு தாவி ஓடிவிட்டனர். பட்டேல் சமூகத் தலைவரான ஹர்திக் பட்டேலும் கூட காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவிட்டார். 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மொத்தம் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவிவிட்டனர். நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி உக்கிரமான தேர்தல் பிரசாரம் செய்தது. கிராமப்புறங்களில் பாஜக முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டது. இதனால் திரும்பிய திசை எங்கும் காங்கிரஸுக்கு பேரிடிதான் விழுந்தது. இதுவே தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி மட்டுமல்ல ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் கபளீகரம் செய்ததால் உள்ளதும் போச்சு நிலையில் வரலாறு காணாத பெருந்தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+