பிரதமர் மோடி அட்வைஸ்..மத்திய அரசு பணியை துறந்தவரை கைவிட்ட பாஜக! தாமரையை வீழ்த்த குஜராத்தில் போட்டி
காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த நிலையில் அவரது ஆலோசனையில் வருமான வரித்துறை உதவி கமிஷனராக இருந்தவர் விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கட்சியினரால் அவமரியாதை செய்யப்பட்ட நிலையில் குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் பாஜகவின் டாப் தலைவரை வீழ்த்த போட்டியிட்டுள்ளார்.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவே அரசியலில் ஆதிக்கத்துடன் உள்ளது.
இதற்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. குஜராத்தை பொறுத்தமட்டில் அரசியல் என்றால் அது பாஜக, காங்கிரஸ் கட்சிகளையே சார்ந்து உள்ளது.

மும்முனை போட்டி
இந்நிலையில் தற்போது குஜராத் அரசியல் களத்தில் ஆம்ஆத்மி கட்சி குதித்துள்ளது. இதனால் குஜராத் அரசியல் களம் இருமுனை போட்டி என்பதை தாண்டி தற்போது மும்முனை போட்டியை எதிர்கொள்கிறது. மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர்.

தீவிர பிரசாரம்
இங்குள்ள 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8 ல் வெளியாக உள்ள நிலையில் தற்போது குஜராத்தில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் பிரசாரத்தை துவங்க உள்ளனர். ஆம்ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பிற தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பேசும் பொருளான ஆம்ஆத்மி வேட்பாளர்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் அட்வைஸால் பாதிக்கப்பட்டதாக கூறி பாஜகவை பழிவாங்கும் முனைப்புடன் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் குஜராத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த நபர் ஆம்ஆத்மி கட்சி சார்பில் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வியை எதிர்த்து சூரத் மஜூரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் யார்? எதற்காக பாஜகவுக்கு எதிராக குஜராத்தில் போட்டியிடுகிறார்? என்பன போன்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

தெலங்கானாவை சேர்ந்தவர்
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவரகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் பிவிஎஸ் சர்மா. இவரது வயது 57. இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1992ல் குஜராத் மாநிலம் சூரத்தில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக உயர்ந்தார்.

பிரதமர் மோடி அட்வைஸ்
இந்நிலையில் தான் கடந்த 2007ல் பிவிஎஸ் சர்மா விருப்ப ஓய்வு பெற்றார். அப்போது அங்கு முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த நிலையில் அவரது ஆலோசனையில் விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். இதையடுத்து வர் பல்வேறு பதவிகளை பெற்றார். தம்பால் கவுன்சிலர், சூரத் மாநகராட்சி தலைவர், சூரத் மாநகர பாஜக துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தார்.

அவமரியாதை
இந்நிலையில் தான் தற்போது அவரை பாஜக தலைவர்கள் அவமரியாதை செய்துள்ளனர். அவருக்கு உரிய பதவிகள் வழங்காமல் ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் சர்மா மனம் உடைந்தார். இந்நிலையில் தான் அவர் கடந்த 9 ம் தேதி பாஜகவில் இருந்து விலகி ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தான் அவர் சூரத் மஜூரா தொகுதியில் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வியை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்டுள்ளார்.

என்ன சொல்கிறார் சர்மா?
இதுபற்றி சர்மா கூறுகையில், ‛‛ஒழுக்கம் நிறைந்த கட்சி உறுப்பினராக நீண்டகாலம் பாஜகவில் பணியாற்றினேன். தற்போது கட்சியை விட்டு வெளியேறியது உண்மையில் கடினமான முடிவாக தான் இருந்தது. இருப்பினும் அதனை செய்தேன். மஜூரா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்விக்கு எதிராக போட்டியிடுவதும் சவாலானது. இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும். இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நல்ல வரவேற்பு
தேர்தலில் ஆம்ஆத்மி வென்றால் 300 யூனிட் மின்சார், இலவச கல்வி, மருத்துவம் தொடர்பான வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளது. அதுபற்றி அவர்கள் பேசுகின்றன. இது நிச்சயம் கைக்கொடுக்கும். மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் தேர்தலில் எதிரொலிக்க உள்ளது'' என்றார்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
மஜூரா சட்டசபை தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் 2.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வெளிமாநில மக்கள் தான் அதிகமாக வசித்து வருகின்றனர். குறிப்பாக உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2012 முதல் பாஜக சார்பில் ஹர்ஷ் சங்வி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் அவரை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் சர்மா போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் நபராக உள்ளனர். இதில் ஆதரவை பெற்று பிவிஎஸ் சர்மா வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications