”குஜராத்தி குண்டர்கள்”- அவதூறு வழக்கில் தேஜஸ்வி யாதவ்-க்கு குஜராத் கோர்ட் சம்மன்-ராகுல் போல சிக்கல்?
அகமதாபாத்: குஜராத்திகளை குண்டர்கள் என விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாட்டை விட்டு தப்பி ஓடும் மோடிகள் குறித்து விமர்சித்தார். ஆனால் மோடி என்ற சமூகத்தை இழிவுபடுத்தியதாக ராகுல் காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்பி பதவி பறிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியும் ராகுல் காந்திக்கு திருப்பி தரப்பட்டுள்ளது.

இதே போல ஒரு வழக்கை பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் எதிர்கொண்டிருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மார்ச் 21-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், குஜராத்திகள்தான் குண்டர்கள்- மோசடி செய்பவர்களாக இருக்க முடியும் என விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து தேஜஸ்வி யாதவ் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஹரேஷ் மேத்தா, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட் டி.பார்மர் விசாரித்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி அகமதாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications