சல்லி சல்லியா போச்சே.. சறுக்கும் காங்., குஜராத்தில் மீண்டும் காவி.. 128 இடங்களாமே.. என்டிடிவி கணிப்பு
குஜராத் தேர்தலில் பாஜக 128 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது
காந்திநகர்: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.. அதேபோல, இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது..
குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 2012 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த தொகுதிகளிலிருந்து, காங்கிரஸ் 16 தொகுதிகளை வென்றெடுத்திருந்தது... ஆனால், 2017 தேர்தலுக்கு பிறகு, திடீர் சறுக்கல் காங்கிரஸில் ஏற்பட்டது. இதற்கு காரணம், 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்போது பாஜகவுக்கு தாவியிருந்ததுதான்..
கடந்த தேர்தலிலும், பாஜக இங்கு வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்தது.. அதனால்தானோ என்னவோ, இந்த முறை குஜராத்தில் தேர்தல் என்றதுமே, மேலிட தலைவர்கள் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தினார்கள்.

7வது முறை
பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பதால் இந்த முறை தேர்தலில் எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன.. 6 முறை குஜராத்தை ஆக்கிரமித்து கொண்ட பாஜக, 7வது முறையும் அரியணை ஏறுவதற்கான ஆசையை வளர்த்து கொண்டுள்ளது.. அதற்கான முயற்சியையும் கையில் எடுத்தது.. அதிரடி அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் பிரச்சாரங்கள் என 3 வகைகளில் தங்கள் வியூகங்களை படரவிட்டனர்.. முக்கியமாக பிரதமர் மோடி, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில்தான், அதிக அளவுக்கு இங்கேயே முகாமிட்டிருந்தார்.

3 காரணங்கள்
இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.. பாஜகவின் சொந்த பிரமுகர்களே, சீட் கிடைக்காததால் அப்செட் ஆனதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.. மற்றொரு பக்கம், மோர்பி பாலம் விபத்தும், அதையொட்டி எழுந்த விமர்சனங்களும் பாஜகவை நிஜமாகவே கலங்கடித்துவிட்டன.. அதனால், இந்த தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அடுத்ததாக, இந்த தேர்தலிலும் வென்றால், 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை பாஜக நெருங்கிவிடும் .. இந்த 3 பிரதான விஷயங்களை முன்னிறுத்தியே பாஜக, தன் ஆபரேஷனை இங்கு தொடங்கியது.

செல்வாக்கு
இந்த தேர்தலில் பாஜக வெற்றி வெற்றால், இந்த வெற்றியின் தாக்கம் அப்படியே 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் வலியுறுத்தியபடியே உள்ளனர்.. எனினும், மத்திய பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தொடர்ந்து பாதித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல். டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொது பிரச்னைகளை குஜராத் மாநில மக்கள் அதிகமாகவே சந்தித்து வரும்நிலையில், பாஜகவின் வாக்கு வங்கியை அது பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

எக்ஸிட் போல்
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்று சொல்லப்படும் எக்ஸிட் போல் ரிசல்ட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போலில், குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.. காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.. அதாவது, காங்கிரசுக்கும், பாஜகவுக்குமான வெற்றி விகிதம் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது.. அதுபோலவே, என்டிடிவி வெளியிட்டுள்ள எக்ஸிட் போலிலும் பாஜகவே வெற்றியை பெறும் என்று அறுதியிட்டு சொல்கிறது.

மாஸ் வெற்றி
பாஜக 128 இடங்களை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி 55 இடங்களையும், ஆம் ஆத்மி 7 இடங்களை பெறும், மற்றவை 3 இடங்கள் என்றும் என்டிடிவி தெரிவித்துள்ளது. முன்னதாக, ரிபப்ளிக் டிவி - பி. மார்க் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பிலும், குஜராத்தில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது... காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி 2 முதல் 10 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் அது கணித்துள்ளது.

அச்சு அசல்
அதேபோல, டிவி9 குஜராத்தி வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக 125 தொகுதிகள் முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அறுதியிட்டு சொல்லி உள்ளது.. காங்கிரஸ் 40 முதல் 50 இடங்கள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது... தேர்தலில் வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தேர்தலுக்கு பிந்தைய இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன என்றாலும், சொல்லி வைத்ததுபோல, இந்த கணிப்புகள் அனைத்துமே, ஒரே மாதிரி பாஜகவே வெற்றி பெறும் என்று வெளிவந்துள்ளது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications