71 எனக்கு 65 உனக்கு.. முதியோர் இல்லத்தில் பூத்த காதல்.. ஜாம் ஜாமுன்னு கல்யாணம்.. பூரித்த மணமக்கள்
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த திருமணம் ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வித்தியாசமான திருமணத்தை பார்த்த இணையவாசிகள், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய சூழலில், தூய்மையான காதலாக இருந்தாலும், அது தோல்வியடைந்துவிடும் பட்சத்தில், மற்றொரு காதல் மலர்வது இயல்பாகிவிட்டது. இந்த நடைமுறைகள் எப்போதோ செயல்பட துவங்கிவிட்டது என்றாலும், நம் சமூகத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு தான் வருகின்றன... எழுதப்படாத விதிமுறைகளும் நிலுவையில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

திருமணம்: குறிப்பாக, அந்த வகையில் திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது.. எவ்வளவுதான நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்களுக்கு, மறுதிருமணத்தை இந்த சமூகம் முழுமையாக அங்கீகரிப்பதில்லை.
இதுபோல் லட்சக்கணக்கான இளம்வயது பெண்கள், நாலு சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்நாளை கழித்து, இறந்து போகும் அவலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எனினும் ஆங்காங்கே இந்த நிலைமை மாறி வருகிறது.. அதிலும் இளைய சமுதாயம், புது சிந்தனையுடன் வளர தொடங்கிவிட்டார்கள்.. கணவன், மனைவியை பறிகொடுத்துவிட்டு தனிமையிலுள்ள, தங்களது தாய் அல்லது தந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு மாறுதல்கள் ஏற்பட துவங்கிவிட்டது..
அசாம் மாநிலம்: இந்நிலையில், வித்தியாசமான திருமணம் ஒன்று அசாமில் நடந்துள்ளது.. கோலாகட் மாவட்டத்தில் உள்ளது போககாட் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பத்மேஸ்வர் கோலா.. இவருக்கு 71 வயதாகிறது.. வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை. தன்னுடைய 2 சகோதரர்கள் ஆதரவில்தான் இருந்து வந்தார். ஆனால், கடந்த வருடம் இவரது 2 சகோதரர்களுமே இறந்துவிட்டார்கள். இதனால், பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
அதேபோல, ஜெயபிரபா என்ற 65 வயது பெண்ணும், வேறொரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.. சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா.. குடும்பத்தில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இவருக்கும் திருமணமாகவில்லை.. எனவே, கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த முதியோர் இல்லம் பெண்களுக்கானது.
நேரில் சந்திப்பு: இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளார்கள்.. பத்மேஸ்வர் நன்றாக பாட்டு பாடுவாராம்.. அருமையான குரல் வளம் கொண்டவர்.. எப்போதுமே இந்தி பாடல்களை பாடிக் கொண்டேயிருப்பாராம்.. இவரது பாட்டு, ஜெயப்பிரபாவுக்கு பிடித்துவிட்டது.. பத்மேஸ்வரின் குரலில் மயங்கினார்.. இறுதியில் தன்னுடைய மனதையே பறிகொடுத்துவிட்டார்.
நாளடைவில் இருவருமே உயிருக்கு உயிராக விரும்ப ஆரம்பித்தனர்... இவர்களது காதல் விவகாரம், 2 முதியோர் இல்லத்துக்கும் தெரியவந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. தங்களை நம்பி வந்திருந்த இருவருக்கும், தாங்களே திருமணம் செய்து வைக்கலாம் என்றும் முடிவெடுத்தனர்.
சிறப்பு திருமணம்: இந்த திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இறுதியில் அனைவரது விருப்பப்படியும் ஜாம் ஜாமென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. மணமக்கள் இருவருமே அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர்... அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன..
இந்த திருமணம் குறித்து தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் சொல்லும்போது, பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள்.. அனைவருக்கும எங்கள் கையாலேயே உணவு பரிமாறினோம்.. மணமக்களை வந்திருந்தவர்கள் மனமார வாழ்த்தி சென்றார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications