‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு… ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய மனிவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர்.
டெல்லி: 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தனர்.
மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் இதுவரை நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்தது. இதனையடுத்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் விதமாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மசோதாவிற்கு இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஜவடேகருடன் சந்திப்பு
இந்நிலையில், இன்று தமிழக அமைச்சர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் டெல்லிக்கு சென்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினர்.

‘நீட்’டில் இருந்து விடுதலை
சந்திப்பிற்கு பின்னர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அமைச்சர் பரிசீலிப்பதாக ஜவடேகர் கூறியுள்ளார் என்றும் கூறினார்.

அமைச்சர் உறுதி
மேலும், அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

குழப்பத்தில் மாணவர்கள்
12ம் வகுப்பு தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால் ஏற்கனவே இருக்கும் படிப்பு சுமையோடு ‘நீட்' தேர்வு குழப்பமும் மாணவர்களை அழுத்தி வருகிறது. எனவே, ‘நீட்' குறித்து விரைந்து முடிவெடுக்க பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications