சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை
சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று மூன்றாவது முறையாக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் 80.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் இந்த அளவுக்கு கனமழை பதிவாவது மூன்றாவது முறை ஆகும்.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழையும் சென்னை ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
- இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை?
- காலநிலை நெருக்கடி குறித்த அறிக்கை சென்னையை எச்சரிப்பது ஏன்?
- பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து?
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
மேலும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் ஜி.பி. சாலை, புளியந்தோப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications