மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்கள்.. முக்கிய குற்றவாளியை தட்டித்தூக்கிய போலீஸ்! யார் இவர்?
இம்பால் : மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக இழுத்து வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் பாஜக ஆட்சி நிகழ்ந்து வருகிறது. இங்கு மைத்தேயி எனும் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொண்ட போது இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார்.
பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் கேங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் ஆடைகளை களைந்து சாலையில் இழுத்து சென்றனர். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை தடுக்க சென்ற அந்த பெண்களின் தந்தை, சகோதரர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை போலீஸார் வேடிக்கை பார்த்ததாக மற்ற பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மணிப்பூரில் இரு பெண்கள் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் ஹேராதாஸ் (32) கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இன்று மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications