ராம் ரஹீம் உள்ளே .. இதோ அடுத்த வாரிசு ரெடி!
ராம் ரஹீமின் நிழலாக இருந்த ஹனிபிரீத் இன்சான் அவரது தத்தெடுக்கப்பட்ட மகளாவார்.
சண்டீகர்: ராம் ரஹிமின் நிழலாக அவருடனே இருந்த ஹனிபிரீத் இன்சான் அவரது தத்து மகளாவார். சாமியார் ரஹீமின் சர்ச்சைக்குரிய தேரா சச்சா அமைப்பை நிர்வகிக்க போகும் அடுத்த வாரிசாக கருதப்படுகிறார்.
ஹரியானா மாநிலம், சிர்சாவில் தேரா சச்சா சவுதா அமைப்பை தொடங்கியவர் ராம் ரஹீம் சிங். சாமியாரான இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்து சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் புகாரில் அவர் குற்றவாளி என்பதை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலவரம் வெடித்தது
ராம் ரஹீமை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானா மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 36 பேர் உயிரிழந்தனர். அப்போது ராம் ரஹீம் ஒரு ஹெலிகாப்டரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவருக்கு எதிரே ஒரு பெண் அமர்ந்திருப்பது போன்றும் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அகஸ்டா வெஸ்ட்லாண்ட்
15 பேர் உட்காரக் கூடிய விஐபிகளுக்கான அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ஹெலிகாப்டரில் உள்ள அந்த பெண் ஹனிபிரீத் இன்சான் ஆவார். அவர் ராம் ரஹிமின் தத்து மகளாவார்.

ராம் ரஹிமின் குடும்பம்
ராம் ரஹிமிற்கு ஹர்ஜீத் கௌர் என்ற மனைவியும், ஆமன் பிரீத் மற்றும் சரண் பிரீத் என்ற மகள்களும், ஜாஸ்மீத் இன்சான் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹனிபிரீத் இன்சான் என்பவரை கடந்த 2009-இல் தனது மகளாக ராம் ரஹிம் தத்தெடுத்துக் கொண்டார்.

யார் இந்த ஹனி பிரீத்?
ஹனிபிரீத்தின் இயற்பெயர் பிரியங்கா தனேஜாவாகும். இவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் சீடரான விஷ்வாஸ் குப்தாவை கடந்த 1999-இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் பிரியங்காவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதை அறிந்த ராம் ரஹிம், பிரியங்காவை தனது மகளாக கடந்த 2009ல் தத்தெடுத்துக் கொண்டார். அதுமுதல் தனது பெயரையும் ஹனி பிரீத் இன்சான் என்று மாற்றிக் கொண்டார் பிரியங்கா.

தந்தையின் நிழல்போல்
அதுமுதல் தந்தை ராம் ரஹிமின் நிழல் போல் அவருடனே இருந்து வந்தார் ஹனிபிரீத். இவரது பேச்சுக்கு தேரா சச்சா சவுதா அமைப்பில் செல்வாக்கு உண்டு. ராம் ரஹிமுக்கு குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும் ஹனிபிரீத்தான் அதிகமாக இணையத்தில் தொடர்பில் உள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர்
இவர் தனக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இவரை டுவிட்டரில் 10 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 5 லட்சம் பேரும் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை லட்சம் பேரும் பின்பற்றி வருகின்றனர்.
|
அடுத்த வாரிசு
சர்ச்சைக்குரிய தேரா சச்சா சவுதா அமைப்பை ஹனிபிரீத் ஏற்றுக் கொண்டு இயக்குவார் என்றும் அவர்தான் ராம் ரஹிமின் அடுத்த வாரிசு என்றும் கூறப்படுகிறது. இந்த ஹனிபிரீத் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். அப்பாவின் தேவதை என்று தனது இணையதளத்தில் தன்னை குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பாவின் உத்தரவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதே தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications