40 வருட ஏக்கம்! சட்டீஸ்கர் பழங்குடி மக்களின்.. வாழ்க்கையில் ஒளி ஏற்றிய நம்ம மதுரை ஐஏஎஸ் அதிகாரி!
ராய்ப்பூர்: 40 வருடங்களுக்கும் மேலாக நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த சட்டீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகள், தற்போது ஒரு வரலாற்று மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆயுதமேந்திய நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, அங்குள்ள பழங்குடியின மக்களை வெளி உலகத்துடன் இணைக்கும் முக்கிய முயற்சியாகப் பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு உள்ளது.
2006-ல் முடங்கிய போக்குவரத்து சேவை
2000-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து சட்டீஸ்கர் தனி மாநிலமாக உருவானபோது, அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், நக்சலைட்டுகளின் தொடர் தாக்குதல்கள், பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் போதுமான வருவாய் இல்லாத சூழல் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் 2006-ம் ஆண்டு அரசு தன் பேருந்து சேவையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது.

சுமார் 18 ஆண்டுகளாக நம்பகமான பொதுப் போக்குவரத்து இல்லாததால், நக்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். பள்ளி, மருத்துவமனை, சந்தை மற்றும் அரசு அலுவலகங்களை அடைய கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காடுகளின் வழியே நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
சட்டீஸ்கர் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, இங்குள்ள பழங்குடியினரின் எழுத்தறிவு விகிதம் வெறும் 59.1 சதவீதமாக மட்டுமே இருந்தது. பள்ளி செல்ல போக்குவரத்து வசதி இல்லாததே இடைநிற்றலுக்கு முக்கியக் காரணியாக விளங்கியது.
மதுரை ஐஏஎஸ் அதிகாரியின் புதிய திட்டம்
இந்த முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில், சட்டீஸ்கர் மாநிலப் போக்குவரத்துத் துறைச் செயலாளராகப் பணியாற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பிரகாஷ் தலைமையிலான குழு ஒரு புதிய அணுகுமுறையை வகுத்தது.
புதிதாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கைகோர்த்து ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தியது. தொலைதூரப் பழங்குடியின கிராமங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்க தனியார் உரிமையாளர்கள் முன்வந்தனர். இதன் ஆரம்பக் கட்டணம் வெறும் ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, மாநில அரசு நேரடி மானியங்களை வழங்கி வருகிறது.
108 பேருந்துகள்... 13 மாவட்டங்கள்
தற்போது பஸ்தார் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 108 பேருந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்வதும், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அருகிலுள்ள நகர சந்தைகளுக்கு விளைபொருட்களைக் கொண்டு செல்வதும் எளிதாகியுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்துத் துறைச் செயலாளர் எஸ்.பிரகாஷ், "பழங்குடியின சமூகங்களை மீண்டும் பள்ளிகளோடும் நகரங்களோடும் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். மக்கள் இப்போது நகர்ப்புறங்களுக்கு அடிக்கடி பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இது அவர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு நக்சல் அச்சுறுத்தல் காரணமாகப் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இப்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் நிலைமை மிக வேகமாகச் சீரடைந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் துப்பாக்கிச் சத்தங்களும் அச்சமும் மட்டுமே நிறைந்திருந்த சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில், இன்று மாணவர்கள் புத்தகப் பைகளுடன் பேருந்தில் பயணிக்கும் காட்சி, 40 ஆண்டுகால மோதலுக்குப் பிறகு அப்பகுதி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதன் வலுவான சான்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
