இயற்கைக்கு மாறான உறவு.. தம்பதிக்குள் பெருகும் பாலியல் குற்றம்.. எது வன்கொடுமை? நீதிமன்றம் சொல்வதென்ன?
கான்பூர்: திருமண உறவில் நிகழும் பாலியல் குற்றங்களும், அதுகுறித்த வழக்குகளும் தற்போது பேசுபொருளாகி வருகிறது.. குறிப்பாக, இயற்கைக்கு மாறான உறவு தம்பதிக்குள் நிகழ்ந்தால் அது குற்றமாக கருதப்படுமா? மனைவிக்கு சம்மதம் இல்லையென்றாலும், பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாகுமா? இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன?
4 நாட்களுக்கு முன்பு அலகாபாத் கோர்ட் தந்த தீர்ப்பு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வசித்துவருகிறார் பிரஞ்சல் சுக்லா.. இவரது மனைவி பெயர் மீஷா.. இவர்களுக்கு கடந்த 2015ம் வருடம் திருமணம் நடந்துள்ளது.. ஆரம்பத்தில் தம்பதி இருவருமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

பிறகு, திடீரென மீஷா தன்னுடைய கணவர் பிரஞ்சல் சுக்லா மீதும், மாமியார் வீட்டினர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.. மாமியார் குடும்பத்தை சேர்ந்த மது ஷர்மா, புன்யா ஷீலா ஷர்மா ஆகியோர் மீதும் போலீசில் வரதட்சணை புகார் தந்தார்..
ஆபாச படங்கள்: மேலும், அலகாபாத் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த புகாரில், "திருமணத்திற்கு பிறகு என் கணவர் பிரஞ்சல் சுக்லா, அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார்கள்... ஆபாச படங்களை பார்க்க என்னுடைய கணவர் கட்டாயப்படுத்துகிறார்.. இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவில் ஈடுபடவும் வலியுறுத்தி கொடுமைபடுத்துகிறார்" என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மீஷாவிடம் வாக்குமூலம் பெற்றது.. அதேபோல, மீஷாவின் கணவர் பிரஞ்சல் சுக்லாவிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், மீஷா சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என்பது தெரியவந்தது. எனவே, மீஷா ஏன் இப்படியொரு பொய் சொல்ல வேண்டும் என்று அடுத்த விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான், இல்லற உறவில் ஏற்பட்ட சிக்கல்தான் புகார் வரை முளைத்திருப்பதாக நிரூபணமானது.
பாலியல் உறவு: இதையடுத்து, இந்த வழக்கு குறித்து அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி அனிஷ் குமார் குப்தா 4 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், தம்பதி இடையே ஏதாவது தாக்குதல் நடந்திருந்தால் அது வரதட்சணைக்காக அல்ல என்பதும் எதிர் தரப்பினரின் (கணவர்) பாலியல் உறவுக்கு மறுத்ததால் நடந்தது என்பதும் உறுதியாகிறது.
தம்பதிக்கிடையேயான பிரச்சனையே, பாலியல் இணக்கமின்மை தொடர்பான சர்ச்சை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒழுக்கமான நாகரிக சமூகத்தில் ஒருவர், தன்னுடைய சொந்த மனைவியை அல்லது கணவரை தவிர இல்லற இன்பத்துக்கு வேறு எங்கு செல்ல முடியும்?" என்று கூறி வரதட்சணை புகாரை தள்ளுபடி செய்தார்.
நீதிமன்றம்: இதுபோலவே, சமீபத்தில் இயற்கைக்கு மாறான உறவு வைப்பது தொடர்பாக மத்திய பிரதேச நீதிமன்றமும் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியிருந்தது.. பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் ம.பி. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருந்தது.
நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் "மனைவியுடன் குறிப்பிட்ட பாலியல் உறவில் இருக்கும் ஒரு கணவனின் செயல், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது.. மனைவிக்கு சம்மதம் இல்லையென்றாலும், அது வன்கொடுமையில் வராது.. ஒருவேளை அந்த மனைவி 15 வயதுக்கு கீழ் இருந்தால் மட்டுமே அது குற்றமாக கருதப்படும்.
மனைவியின் சம்மதம்: திருமணமான இருவரிடையே நடக்கும் பாலியல் செயல்பாடுகளின் சில கூறுகள், இந்திய சட்டத்தில் குற்றமென அங்கீகரிக்கப்படவில்லை.. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனைவியின் சம்மதம் முக்கியமற்றது.. எனினும், IPC 376 பி-யின்படி, நீதிமன்ற உத்தரவு காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ கணவன் மனைவி தனித்தனியாக வாழும்போது, தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமையாக கருதப்படும்.
ஆனால், IPC பிரிவு 377ன் கீழ், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் கணவன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது குற்றமாகாது என்று தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி.. இந்த தீர்ப்பு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது..
பாலியல் குற்றங்கள்: இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 375, பாலியல் வல்லுறவை வரையறுத்து, அதை குற்றமாக்குகிறது .. இந்த குற்றத்திற்கு 376வது பிரிவின் கீழ் தண்டனை வழங்குவதற்கான நடைமுறையும் உள்ளது. அதேபோல், இயற்கைக்கு மாறான பாலியல் செயல் பிரிவு 377இல் சேர்க்கப்பட்டிருக்கிறது.. அந்த வகையில், "Marital Rape" எனப்படும் "திருமண உறவில் நிகழும் பாலியல் குற்றங்கள் தற்போது மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதேபோல சத்தீஸ்கர் ஹைகோர்ட்டில் ஒரு வழக்கில், "ஒரு ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வ திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு "வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும்" அது கற்பழிப்பு அல்ல என்று கூறியிருந்தது.
கட்டாய உறவு: இதேபோன்ற தீர்ப்பை மும்பை கூடுதல் அமர்வு நீதிமன்றமும் வழங்கியது. தன்னுடைய கணவர் கட்டாய உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணின் புகார் சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறிய நீதிமன்றம், "கட்டாய உடலுறவு கொண்டவர் "கணவனாக இருப்பதால் அவர் சட்டவிரோதமான காரியத்தைச் செய்தார் என்று கூற முடியாது" என்று தெரிவித்திருந்தது.
இதுபோன்ற தீர்ப்புகள் எல்லாம், மக்கள் மத்தியில் அவ்வப்போது பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும், அந்த பெண், தன்னுடைய மனைவி என்ற காரணத்திற்காக, பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை அணுகுவது பாலியல் துன்புறுத்தலில்தான் அது சேரும் என்று 3 வருடங்களுக்கு முன்பு, கேரள ஹைகோர்ட் ஒரு வழக்கில் உத்தரவிட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications