‛அல்லா மீது சத்தியம்’.. ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் மம்தா பானர்ஜி கூறிய வார்த்தை! விளாசும் பாஜக
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி நேற்று அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த சமயத்தில் ‛‛அல்லா மீது சத்தியமாக செய்கிறேன்'' எனக்கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த 5 வயது பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகள் செய்தார். கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

முன்னதாக ராமர் கோவில் விவகாரத்தை மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அரசியல் லாபத்துக்காக பாஜக ராமர் கோவிலை பயன்படுத்துகிறது என சாடியிருந்தார்.
அதுமட்டுமின்றி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ‛சர்வ் தர்மம் சம்பவ்' என்ற பெயரில் அனைத்து மத நல்லிணக்கம் என பேரணி நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அது மாநிலத்தில் செல்வாக்கை கூட்டும் எனவும் மம்தா பானர்ஜி கணக்கிட்டுள்ளார்.
அதன்படி இந்த பேரணி நேற்று தொடங்கியது. அங்குள்ள காளிகாட் கோவிலில் தரிசனம் செய்து அவர் இந்த பேரணியை மம்தா பானர்ஜி தொடங்கினார். இந்த பேரணியில் பல்வேறு மதங்களை சேர்ந்த அவரது கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். கோவில்கள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள் மற்றும் மசூதிகள் என பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று மம்தா பானர்ஜி வழிபாடு நடத்தினார்.
மேலும் அவர் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர் கூறிய கருத்து தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பாஜகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது மம்தா பானர்ஜி, ‛‛ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பாஜகவுக்கு ஆதரவு அல்லது உதவி செய்யாதீர்கள். ஓட்டும் போடாதீர்கள். நீங்கள் பாஜகவுக்கு உதவினால் என்னையை விடுங்கள் யாரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். இது அல்லாவின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்'' என்றார். மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மம்தா பானர்ஜி இப்படி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் பாஜக ஆதரவாளர்கள் மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்து வருகின்றனர். ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுவதாக குற்றச்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications